Press "Enter" to skip to content

பாலியல் தாக்குதல் குறித்து பாரத் ஜோடோ யாத்திரையில் புகார்: ராகுல் வீட்டுக்கு வந்த காவல் துறை

பட மூலாதாரம், ANI

பாரத் ஜோடோ யாத்திரையின்போது பெண்களின் மீது பாலியல் தாக்குதல் நடப்பதாக ராகுல் காந்தி பேசிய பேச்சு தொடர்பாக விசாரிப்பதற்காக, டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வீட்டுக்கு காவல் துறை வந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோதியின் உற்ற நண்பரை பாதுகாக்கும் முயற்சி இது என்றும், இது கோழைத்தனமான செயல் என்றும் கூறி காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய அரசியலிலும் இது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

“டெல்லி காவல் துறை ராகுல் காந்தியை சந்திக்க இருக்கிறது. அவரிடம் இருந்து நாங்கள் கேட்டுள்ள தகவல்களை அவர் அளிப்பார். அவருக்கு இது தொடர்பாக அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவரது அலுவலகம் அந்த நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ளது” என்று டெல்லி காவல் துறை சிறப்பு ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சாகர் பிரீத் ஹூடா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ராகுல் காந்தி லண்டன் சென்றிருந்தபோது, இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக பல இடங்களில் பேசினார், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இதற்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது.

அதானி நிறுவனம் தீவிரமான மோசடிகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது இந்தியாவின் பங்குச் சந்தையிலும், அரசியலிலும் கடுமையாக எதிரொலித்தது.

பிரதமர் நரேந்திர மோதிக்கும் அதானி நிறுவனர் கௌதம் அதானிக்கும் உள்ள உறவு காரணமாகவே அதானி திடீரென அபரிமிதமாக வளர்ச்சி அடைந்ததாக குற்றம்சாட்டும் விதமாக நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு கவனத்தை ஈர்த்தது. இந்தப் பிரச்சனையில் காங்கிரஸ் கவனம் குவிக்க முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுகளை இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாக காட்டி பாஜக விமர்சனம் செய்யத் தொடங்கியது.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது என பாஜக தலைவர்கள் எதிர்வினையாற்றினர். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பாஜக.

இந்த சூழலில் டெல்லியில் உள்ள ராகுல் காந்தி வீட்டுக்கு காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றனர்.

பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் தம்மிடம் புகார் கூறியதாக பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் பேசியிருந்தார். அந்த கூற்று தொடர்பாக மேலதிக தகவல்களைத் திரட்டவே ராகுலை சந்திக்க திட்டமிட்டதாக காவல் துறை கூறியுள்ளது.

பேசி, 45 நாட்கள் கழித்து ராகுல் காந்தி வீட்டுக்கு சென்று கேள்வி கேட்க நினைப்பது சர்வாதிகார அரசாங்கத்தின் மற்றுமொரு கோழைத்தனமான செயல் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே விமர்சித்துள்ளார்.

சாகர் பிரீத் ஹூடா

பட மூலாதாரம், ANI

நரேந்திர மோதியின் உற்ற நண்பரை பாதுகாக்க அரசு தீவிர முயற்சியில் இறங்கியிருப்பதாக குற்றம்சாட்டிய அவர், முதலில் நாடாளுமன்றத்தை நடத்துங்கள். உண்மையை வெளிக்கொண்டு வரலாம் என கூறியுள்ளார்.

எந்தவித காரணமும் இல்லாமல் ஒரு தேசிய தலைவரின் வீட்டிற்கு காவல்துறை நுழைய முயற்சிப்பது அமித் ஷாவின் ஆணையின்றி நடக்க வாய்ப்பில்லை என விமர்சித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், “நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு அரசு அஞ்சுகிறது. அவர்கள் எங்களை ராகுல் வீட்டிற்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர். இங்கு என்ன 144 தடை உத்தரவா இருக்கிறது?” என பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கேட்டார்.

கொச்சியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், நரேந்திர மோதி – அதானி குறித்து கேள்வி எழுப்பியதில் இருந்து அரசு ராகுல் காந்தியை துன்புறுத்த தொடங்கிவிட்டது. நாட்டில் நிலவும் சர்வாதிகார நிலையை இது காட்டுகிறது என விமர்சித்தார்

இதனிடையே, ராகுல் காந்தியை சந்தித்துவிட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா, தாங்கள் கேட்ட தகவல்களை அளிக்க ராகுலுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதாகவும், தாங்கள் இன்று அளித்த நோட்டீஸை அவரது அலுவலகம் பெற்றுக்கொண்டதாகவும் கூறினார். நிச்சயம் தகவல் அளிப்பதாக ராகுல் உறுதியளித்துள்ளதாகவும் அவரது தகவல் கிடைத்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கப்போவதாகவும் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »