Press "Enter" to skip to content

பெண் ஆய்வாளர் சாதி, பாலின பாகுபாடு காட்டுவதாக தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவலர் புகார்

கோவை மாநகர காவல்துறையில் பணி புரிந்து வரும் நஸ்ரியா என்கிற திருநங்கை காவலர் தன்னுடைய மேல் அதிகாரி தன் பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாகப் பேசுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நஸ்ரியா என்கிற திருநங்கை கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். அப்போது இந்திய அளவில் இரண்டாவது திருநங்கை காவலராகவும் தமிழ்நாட்டில் முதல் திருநங்கை காவலராகவும் அவர் ஆனார்.

இரண்டு ஆண்டுகள் ராமநாதபுரத்தில் பணியாற்றிய அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை மாநகருக்கு மாற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாக இங்கு பணி புரிந்து வருகிறார். ராமநாதபுரத்தில் பணியில் இருந்தபோதும் தான் துன்புறத்தலை சந்தித்ததாக கூறி தற்கொலை முயற்சி மேற்கொண்டு அதன் பின்னர் கோவை மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளார் நஸ்ரியா.

இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமநாதபுரத்திலிருந்து பணியிடம் மாறி கோவை வந்து ஓர் ஆண்டு ஆயுதப்படையில் வேலை செய்தேன்.

அதுவரை பணி நன்றாகதான் சென்றது. ஒரு சிலர் பாலினத்தைக் குறிப்பிட்டு பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். சில நல்ல அதிகாரிகளும் இருந்தார்கள். இதற்கு முன்னர் காவல் ஆணையரை சந்திக்க முயன்றபோது என்னை அனுமதிக்கவில்லை.

ஒவ்வொரு இடத்திலும் இதே போல் துன்புறத்தல்கள் நடந்துள்ளன. ஏற்கனவே ராமநாதபுரத்தில் இதே போல ஒரு சம்பவம் நடைபெற்று நான் தற்கொலை முயற்சி எடுக்கும் நிலைக்குச் சென்றேன். அதன் பிறகு இது போல் நடந்தபோது நான் புகார் அளித்ததில்லை. இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் விடுப்பில் சென்றுவிடுவேன். அல்லது பணியிட மாறுதல் பெற்றுவிடுவேன். ஆனாலும் நிறைய பேர் கிண்டல் செய்துளாள்ர்கள்.

சமீபத்தில் சிறப்பு குழந்தைகள் பிரிவில் வேலைக்கு சேர சொல்லி அழைத்தார்கள். ஆய்வாளர் மீனாம்பிகை என்பவர்தான் நான் வேலை செய்யும் பிரிவின் பொறுப்பாளர். நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். அதை குறிப்பிட்டு என்னிடம் பேசுவார்

என் பாலினத்தையும் சாதியையும் குறிப்பிட்டு பேசினார். அவரும் தென் மாவட்டத்தில் என் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்தான். சாதி பார்க்கப்படுவதால்தான் என் ஊரிலிருந்து பணியிடம் மாறி வந்து இங்கு வேலை செய்கிறேன். இங்கும் சாதி பார்க்கப்படுகிறது. காவல் ஆணையரைச் சந்தித்து இந்தப் புகாரை தெரிவித்தேன். ஆணையர் அந்த ஆய்வாளரை எச்சரித்திருந்தார்.

அதன் பிறகும் ஆய்வாளர் மீனாம்பிகையின் தொந்தரவு அதிகமானது. எனக்கு அதிக வேலைப்பளு கொடுப்பது போன்ற மன ரீதியான துன்புறுத்தல்கள் கொடுத்து வந்தார். இனி என்னால் பணி செய்ய முடியாது. அதனால் ராஜினாமா செய்ய முடிவு செய்துவிட்டேன். எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று தான் பணியில் சேர்ந்தேன். அந்தப் பணியை இனி தொடர முடியாது என ராஜினாமா கடிதம் எழுதி ஆணையரிடம் கொடுக்க உள்ளேன்” என்றார்.

பாலகிருஷ்ணன்

நஸ்ரியாவின் புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், துணை காவல் ஆணையர் சந்தீஷ் தலைமையில் இதன் மீது விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளார். நஸ்ரியா மீது ஏற்கனவே காவல்துறை தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

திருநங்கை காவலர் நஸ்ரியா புகார் சுமத்தியுள்ள காவல் ஆய்வாளர் மீனாம்பிகையிடம் பேசினோம். தற்போது சிங்காநல்லூர் காவல் நிலைய புலனாய்வு பிரிவில் பணியாற்றி வருகிறார் அவர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “காவலர் நஸ்ரியா எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளுமே பொய்யானவை.

அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் உள்ளன. அதன் மூலம் ஏற்கனவே அவர் பணியிலிருந்து விலகி காவல் ஆணையர் மூலம் மீண்டும் பணியில் இணைந்தார். அவர் பணிக்கு சரியாக வருவதில்லை. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பிரச்சனை ஏற்படுத்தியிருந்தார். அவர் மீதான அறிக்கையை நானும் உதவி ஆணையரும்தான் வழங்கியிருந்தோம்.

சந்தீஷ்

அவர் பணிக்கே வருவது கிடையாது. நீண்ட விடுப்பு, மருத்துவ விடுப்பு எனச் சென்றுவிடுவார். குழந்தைகள் பிரிவு என்பதால் எனக்கு காவல் நிலையத்தை விட பெரும்பாலும் வெளியில்தான் வேலை அதிகமாக இருக்கும். உதவி ஆய்வாளரும் எழுத்தரும்தான் அவருக்கு பணி வழங்குவார்கள்.

நான் அதிகபட்சம் இரண்டு, மூன்று முறைதான் அவரை சந்தித்திருப்பேன். நான் அதிகம் பேசியதும் கிடையாது. ஆனால் நான் சொல்லிதான் அவருக்கு பணி வழங்குவதாக நினைத்துக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை. அவர் மீது கொடுக்கப்பட்ட அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை மறைக்கவே பொய் புகார் எழுப்பி வருகிறார்” என்றார்.

கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில், “புகார் அளித்துள்ள காவலர் நஸ்ரியா பல அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளார். அதனால் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என காவல் ஆணையர் என் தலைமையில் குழு அமைத்துள்ளார்.

தற்போதுதான் விசாரணை தொடங்கியுள்ளது. இதனை மேம்போக்காக அணுகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதே சமயம் புகார் அளித்துள்ள காவலரும் பல தவறுகள் செய்து ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளார். இத்தகைய பின்னணி உள்ளவர் ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். அதனால் அவரது புகாரையும் கவனமாகவே விசாரிக்க வேண்டும்,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »