Press "Enter" to skip to content

‘அரசை விமர்சிப்பவர்கள் குறிவைக்கப்படுகின்றனர்’: இந்தியா குறித்து அமெரிக்கா வெளியிட்ட மனித உரிமை அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த வருடாந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் ‘மனித உரிமை மீறல் சம்பவங்கள் தெரிய வந்துள்ளன. சிறுபான்மை சமூக மக்கள், அரசை விமர்சிப்பவர்கள், பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்படுகின்றனர்’ என்று இந்தியா குறித்து அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை. பதில் கிடைத்தவுடன் அது இந்த அறிக்கையில் சேர்க்கப்படும்.

”இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் உட்பட அந்த நாட்டில் நடைபெறும் பல நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் கூறியிருந்தார். பிளிங்கன் இதைத் தெரிவித்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இருந்தனர்.

ஆனால் இந்திய மத்திய அமைச்சர்கள் இருவரும் மனித உரிமைகள் தொடர்பாக அப்போது எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இது அமெரிக்க அரசிடமிருந்து வரும் ஆண்டு அறிக்கையாகும். இதில் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமைகள் நிலை குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிக்கை 2022 ஆம் ஆண்டிற்கானது.

இந்தியாவைப் பற்றி அமெரிக்க அறிக்கை என்ன சொல்கிறது?

“இந்தியாவில் அரசு அமைப்புகளால் சட்ட விரோதமான, தன்னிச்சையான கொலைகள் நடந்துள்ளன. சிறைகளில் கைதிகள் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற வழிகளில் நடத்தப்படுகின்றனர். அரசியல் கைதிகள் மனம் போனபடி தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள், ஊடகங்கள் மீது அரசு தடைகளை விதிக்கிறது. செய்தியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையில், குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன அல்லது குற்றவியல் வழக்குகளால் அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

இணையத்தைத் தடுப்பதன் மூலம் மக்கள் தொடர்பு சீர்குலைக்கப்படுகிறது.” என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு 2116 பேர் நீதிமன்ற காவலில் இறந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டை விட 12 சதவிகிதம் அதிகம். பெரும்பாலான இறப்புகள் இயற்கையான காரணங்களால் ஏற்பட்டதாகவும், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் பெரும்பாலான காவல் மரணங்கள் நிகழ்ந்ததாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

2021 ஆம் ஆண்டில் 70 சதவிகித கைதிகள் நீதிமன்ற விசாரணைக்காக காத்திருக்கும் போது மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் பிணை பெற முடியவில்லை என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

விமர்சகர்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான UAPA

“இந்தியாவின் மத்திய அரசும், மாநில அரசுகளும் UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) என்ற கடுமையான சட்டத்தின் கீழ் பலரை நீண்ட காலம் சிறையில் அடைத்தது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது மத்திய அரசு UAPA விதித்து அவர்களை கைது செய்தது,” என்று அமெரிக்க அறிக்கை கூறுகிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் அதாவது UAPAவின் மூலம் ஒரு ‘பயங்கரவாதி’ அல்லது ’தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்’ என்ற சந்தேகத்தின் பேரில் எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்காமல் 180 நாட்களுக்கு ஒரு நபரை விசாரணை காவலில் வைத்திருக்க முடியும். இந்த வழக்கில் பிணை கிடைப்பது மிகவும் கடினம்.

2018 ஆம் ஆண்டுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கும் இடையில், 4690 UAPA வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இவற்றில் 149 வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என நிரூபிக்க முடிந்தது. உத்தரபிரதேச அரசு இந்த சட்டத்தை அதிகபட்சமாக பயன்படுத்தியது.

சித்திக் கப்பன்

பட மூலாதாரம், Getty Images

சிறுபான்மையினர், அரசியல் விமர்சகர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மோதி அரசு குறிவைப்பதாக பல வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்கள் குற்ற வழக்குகளில் தன்னிச்சையாக கைது செய்யப்படுவதாக அமெரிக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேரள பத்திரிகையாளர் சித்திக் கம்பன் 28 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இந்த ஆண்டு பிப்ரவரியில் பிணை பெற்றார். 2020 அக்டோபர் 5 ஆம் தேதி ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்புணர்வு விவகாரம் குறித்த செய்தியை சேகரிப்பதற்காக சித்திக் கம்பன் உத்தரபிரதேசத்திற்குச் சென்று கொண்டிருந்தார், அப்போது அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது UAPA சட்டம் பாய்ந்தது.

zubair

பட மூலாதாரம், ANI

கடந்த ஆண்டு ஜூன் மாதம், உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர், அவரது ட்வீட் ஒன்றிற்காக கைது செய்யப்பட்டார். மோதி அரசு, அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய செய்தி சேனல்கள் வெளியிடும் செய்திகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் பணியை முகமது ஜூபைர் செய்து வருகிறார்.

அவர் கைது செய்யப்பட்ட பிறகு, உத்திரபிரதேசத்தில் அவருக்கு எதிராக மேலும் ஆறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் 2022 ஜூலையில் உச்ச நீதிமன்றம் முகமது ஜுபைருக்கு இடைக்கால பிணை வழங்கியபோது, அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எல்லா முதல் தகவல் அறிக்கைகளையும் ஒன்றிணைக்க உத்தரவிட்டது. இதையடுத்து முகமது ஜூபைர் விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்க அறிக்கையில் ‘புல்டோசர் பிரசாரம்’ பற்றிய குறிப்பு

புல்டவுசர் நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images

“அரசை விமர்சிக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் புல்டோசர்களால் இடித்து நொறுக்கப்படுகின்றன. அவர்களின் வாழ்வாதாரம் பாழாக்கப்படுகிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்” என்று அமெரிக்க அறிக்கை கூறுகிறது.

2022 ஆம் ஆண்டில், இந்தியாவின் பல பகுதிகளில் ‘ஆக்கிரமிப்பு எதிர்ப்பு பிரசாரம்’ நடத்தப்பட்டு புல்டோசர்களைக் கொண்டு மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த பிரசாரத்தின் கீழ் வீடுகளை இழந்த பெரும்பாலானவர்கள் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

2019 ஆம் ஆண்டில், மோதி அரசு ஒரு புதிய குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்தபோது, ஐக்கிய நாடுகள் சபை அதை ‘அடிப்படையில் பாரபட்சமானது’ என்று விவரித்தது. இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது பற்றி பேசுகிறது, ஆனால் முஸ்லிம்கள் அதன் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2019 ஆம் ஆண்டில், இந்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டம் 101 நாட்கள் நீடித்தது. ஆனால் கொரோனா மற்றும் டெல்லியின் வடகிழக்கில் நடந்த கலவரங்கள் காரணமாக இந்த ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »