Press "Enter" to skip to content

ஆதி திராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டு வர எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்களை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்போவதாக தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வருகின்றன. அது சரியா? பள்ளிக் கல்வித் துறை என்ன சொல்கிறது?

தமிழ்நாட்டின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடங்கள், கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடங்கள், வனத் துறை, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் நடைபெறும் பள்ளிக்கூடங்கள் ஆகியவை இனி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்திருக்கின்றன. ஆனால், கல்வித் தரத்தை உயர்த்தும்பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது.

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகள் என 1,138 பள்ளிக்கூடங்கள் செயல்பட்டுவருகின்றன. 1324 விடுதிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த பள்ளிக்கூடங்களில் மொத்தமாக 95,013 பேர் படிக்கின்றனர். விடுதிகளில் 98,509 பேர் தங்கியுள்ளனர்.

இது மிகச் சரியான முடிவு என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார். “கடந்த பத்தாண்டுகளில் பள்ளிக் கல்வியின் நிலை பொதுவாகவே மிக மோசமாக இருக்கிறது. கோவிட்டுக்குப் பிறகு ரொம்பவும் மோசமாகிவிட்டது. அதிலும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் கல்வித் தரம் மிகமிக மோசமாக உள்ளது. மாணவர்களின் கற்கும் திறன் குறித்த நேஷனல் அச்சீவ்மென்ட் மேலாய்வுயின் முடிவுகள் 2021ல் வெளியிடப்பட்டன. இந்த மேலாய்வு 2017ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அதில் கிராமப்புற மாணவர்களின் கற்றல் தரம் நகர்ப்புறத்தைவிட குறைவாக இருப்பதும் ஆதிதிராவிட மாணவர்களின் கற்றல்திறன் மிகக் குறைவாக இருப்பதும் தெரியவந்தது.

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள்

பட மூலாதாரம், Getty Images

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளால் நடத்தப்படும் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரை நன்றாகப் படிக்கிறார்கள். ஆனால், மாணவர்களின் படிப்பில் மிக முக்கியமான காலகட்டமான 8ஆம் வகுப்புக்குப் பிறகு, இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்தங்க ஆரம்பிக்கிறார்கள்.

இதற்கு முக்கியக் காரணம், இந்தப் பள்ளிகள் மீதான கண்காணிப்பு. பள்ளிக் கல்வித் துறைக்குக் கீழ் உள்ள பள்ளிகளைக் கண்காணிக்க மாவட்டக் கல்வி அதிகாரி, தலைமைக் கல்வி அதிகாரி என பல மட்டங்களில் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் இந்தக் கண்காணிப்பை தாசில்தார் போன்ற வருவாய்த் துறை அதிகாரிகள்தான் செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் விடுதி எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கண்காணிப்பதோடு நின்றுவிடுகிறார்கள். கல்வித் தரத்தை அவர்களால் கண்காணிக்க முடிவதில்லை.

இப்போது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இந்தப் பள்ளிகள் கொண்டுவரப்படுவதால், கண்காணிப்பு மேம்பட்டு, கல்வித் தரம் உயரும்” என்கிறார் ரவிக்குமார்.

மேலும் சில பிரச்சனைகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுபவர்களில் சுமார் 2 லட்சம் பேர் உயர் கல்விக்குச் செல்ல முடிவதில்லை. தேர்ச்சி பெரும் மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், தமிழ்நாட்டில் போதுமான அரசுக் கல்லூரிகள் கிடையாது. இப்படி கல்லூரிக்குச் செல்ல முடியாமல் போகும் இரண்டு லட்சம் பேரில் ஒரு லட்சம் பேராவது பட்டியலினத்தவராக இருப்பார்கள். அதிலும் கணிசமானவர்கள் ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் படித்தவர்களாக இருப்பார்கள். இதற்கு முக்கியக் காரணம், அவர்களது மதிப்பெண்கள் குறைவாக இருப்பதுதான். இதனால், பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்வது குறைந்துகொண்டே வருகிறது. இப்போது பள்ளிக் கல்வித் துறைக்குக் கீழ் இந்தப் பள்ளிக்கூடங்கள் வருவதால் அந்த நிலை மாறக்கூடும்” என்கிறார் அவர்.

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள்

பட மூலாதாரம், Getty Images

அதேபோல, தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டை அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களே பெற முடியும். ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் சுமார் 33 ஆயிரம் பேர் 12ஆம் வகுப்பு படிக்கிறார்கள். ஆனால், அவர்களால் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டைப்பெற முடியுமா என்பதில் தெளிவில்லை. இப்போது பள்ளிக் கல்வித் துறையின் இந்தப் பள்ளிகள் கொண்டுவரப்பட்டிருப்பதால், அவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு கிடைக்கும் என்கிறார் ரவிக்குமார்.

ஆனால், அரசின் இந்த அறிவிப்பிற்கு கடுமையான எதிர்ப்பும் இருக்கிறது. குறிப்பாக, ஆதிதிராவிடர் நலத் துறைக்கென ஒதுக்கப்படும் நிதி, பள்ளிக் கல்வித் துறைக்கு மடைமாற்றப்படுமோ என்ற சந்தேகமும், ஆதி திராவிடர் நலத் துறையில் இருந்த ஆசிரியர் வேலைவாய்ப்புகள், அவர்களுடைய பணி மூப்பு ஆகியவை என்ன ஆகும் என்ற அச்சங்களும் இருக்கின்றன.

“ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் நடத்தப்பட்டுவந்த பள்ளிக்கூடங்களை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவருவதைக் கடுமையாக எதிர்க்கிறோம். இங்கு பெரும்பாலும் பட்டியலின ஆசிரியர்களே பணியில் இருந்தார்கள். இப்போது பள்ளிக் கல்வித் துறையில் இணைக்கப்படுவதால், பொதுவான இட ஒதுக்கீடே அமலுக்கு வரும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாவது இதனை தடுத்து நிறுத்துவோம்” என்கிறார் தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் நிறுவனரான அ.சக்கரபாணி.

வேறு சிலரைப் பொறுத்தவரை, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தாங்கள் யாருக்காகப் பணியாற்றுகிறோம் என்ற உணர்வுடன் பணியாற்றுவார்கள். ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைக்கப்பட்டால், வேறு பள்ளிகளில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு வரும் ஆசிரியர்கள் பட்டியலின மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது.

“இந்த அச்சத்தை களைய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளிலும் இந்தப் பாகுபாடு இருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தேசிய அறிவுசார் ஆணையம் அமைக்கப்பட்டது. பள்ளிகளில் பாலின, சாதிய பாகுபாடுகளை களைய ஒரு குழுவை இந்த ஆணையம் அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பரிந்துரைகள் இந்தியாவில் எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பப்பட்டன. அந்தப் பரிந்துரைகளைச் சரியாகச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என்கிறார் ரவிக்குமார்.

மேலும், ஆதிதிராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மடைமாற்றப்படுமோ என்ற சந்தேகம் இருப்பதால், பட்டியலினத்தவருக்கான துணைத் திட்டம் வகுப்பத்திற்கென தனியான சட்டம் இயற்றப்பட வேண்டும். தற்போது தமிழ்நாடு அரசு அப்படி ஒரு சட்டத்தை இயற்றப்போவதாக அறிவித்துள்ளது. ஆகவே, நிதி திருப்பப்பட்டுவிடும் என்ற கவலை தேவையில்லை” என்கிறார் ரவிக்குமார்.

பல்வேறு துறைகளால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்கள் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு பலரும் பல காரணங்களைச் சொல்லிவரும் நிலையில், உண்மையான காரணம் என்ன?

“ஆதிதிராவிடர் நலப் பள்ளி, கள்ளர் சீரமைப்புப் பள்ளி என ஜாதிவாரியாக பள்ளிக்கூடங்களை நடத்துவதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இங்கு மற்ற மாணவர்கள் படிக்க முன்வருவதில்லை. இதற்கு இந்தப் பெயர்களே காரணமாக அமைந்துவிடுகின்றன. தவிர, பள்ளிக்கூடங்களை நடத்துவது பள்ளிக் கல்வித்துறையாகத்தான் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத் துறை, கள்ளர் சீரமைப்புத் துறை போன்றவற்றில் வருவாய்த் துறை அதிகாரிகள் இந்தப் பள்ளிக் கூடங்களை நடத்துகிறார்கள். அதனால் தொடர்ந்து கல்வித் தரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இப்போது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இந்தப் பள்ளிக்கூடங்கள் கொண்டுவரப்படுவதால் தரம் மேம்படும்” என்கிறார்கள் கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.

அதேபோல, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் அனைவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் இந்தப் பள்ளிக்கூடங்களை பள்ளிக் கல்வித் துறையில் இணைப்பதால் பட்டியலினத்தோருக்கான வாய்ப்பு குறையும் என்ற கூற்றும் சரியல்ல என்கிறார்கள் அவர்கள். “அப்படி ஒரு இட ஒதுக்கீடு முறையே கிடையாது, எல்லாத் துறைகளிலும் பின்பற்றப்படும் இடஒதுக்கீடுதான் இதிலும் பின்பற்றப்படுகிறது. ஆகவே, பட்டியலினத்தோர் பணிவாய்ப்பு குறையும் என்பது தவறான கருத்து” என்கிறார்கள் அதிகாரிகள்.

1920களின் பிற்பகுதியில், ஒடுக்கப்பட்டோருக்கு கல்வி அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, பட்டியலின மக்கள் வாழ்ந்த பகுதிகளில் தொழிலாளர் நலத் துறையின் மூலம் சிறப்புப் பள்ளிகள் நிறுவப்பட்டனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1949ல் அரிஜன நலத் துறை துவங்கப்பட்டது. 1977ல் இந்தத் துறையின் பெயர் ஆதிதிராவிடர் நலத் துறை என மாற்றப்பட்டது. இந்தத் துறை மூலமாகத்தான் 1135 பள்ளிகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் பள்ளிக் கல்வித் துறை ஒரு பள்ளியைத் துவங்க வேண்டுமென்றால், அந்தப் பகுதியில் குறிப்பிடத்தகுந்த மக்கள் தொகை இருக்க வேண்டும். பட்டியலின பகுதியினர் வசிக்கும் பகுதிகளில் மக்கள் தொகை குறைவு என்பதால் அங்கு பள்ளிகள் திறக்கப்படுவது குறைவாகவே இருந்தது. இந்த பிரச்சனையை நீக்கவே, ஆரம்பத்தில் தொழிலாளர் நலத் துறை மூலம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு பள்ளியை அமைக்க ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் தொகை தேவை என்ற கட்டுப்பாடு, இந்தத் துறைக்கு கிடையாது.

“ஆனால், இப்போது இது முழுமையாக மாறிவிட்டது. பட்டியலினத்தோர் வசிக்கும் பகுதிகளிலோ, அதற்கு அருகிலோ அரசுப் பள்ளிகள் நிறுவப்பட்டுவிட்டன. அரசுப் பள்ளிகளில் வசிக்கும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் பட்டியலினத்தவர்தான். ஆதிதிராவிடர் வசிக்கும் குக்கிராமங்களில் ஆதிதிராவிடர் நலத் துறையால் நடத்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை 100-150தான் இருக்கும். ஆனால், அந்தப் பகுதிகளில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 30,000க்கும் மேல். ஆகவே, இனி அந்தத் துறை தனியாக பள்ளிகளை நடத்த வேண்டிய அவசியமில்லை” என்கிறார்கள் அதிகாரிகள்.

பள்ளிக் கல்வித் துறையில் மட்டுமல்ல, உயர்நிலைக் கல்வியிலும் இது போன்ற மாற்றங்கள் தேவை என்கிறார் ரவிக்குமார். எல்லாவிதமான கல்லூரி படிப்புகளையும் உயர்கல்வித் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »