Press "Enter" to skip to content

தமிழ்நாடு அரசின் இயற்கை வேளாண் கொள்கை: பயன் தருமா? உணவு பற்றாக்குறையில் தள்ளுமா?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழ்

கடந்த வாரத்தில் தமிழ்நாடு அரசு அங்கக வேளாண்மை கொள்கை ஒன்றை அறிமுகம் செய்தது. சென்ற இரண்டு ஆண்டுகளில் விவசாயத்துறை அதிகாரிகள், வல்லுநர்கள், அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் உள்ளிட்டவர்களைக் கொண்ட குழு இந்தக் கொள்கையை வடிவமைப்பதில் ஈடுபட்டிருந்தது.

தற்போது வெளியாகியுள்ள இந்தக் கொள்கையின் தேவை என்ன, எப்படி நடைமுறைப்படுத்தப்படும் விவசாயிகளின் வருமானம் உயர இந்தக் கொள்கை கைகொடுக்குமா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தியாவில் 2.66 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சான்றளிக்கப்பட்ட அங்கக வேளாண்மை நடைபெறுகிறது என்றும் அதில் தமிழ்நாட்டில் அந்த பரப்பளவு 31,629 ஹெக்டேராக உள்ளது என்றும் அங்கக வேளாண்மை கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் அங்கக வேளாண்மையில் மத்திய பிரதேசம் முதல் இடத்திலும் தமிழ்நாடு 14ம் இடத்திலும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2020-21ஆம் ஆண்டு காலத்தில், 4,223 மெட்ரிக் டன் அளவிலான ரூ.108 கோடி மதிப்பிலான அங்கக வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பதால், இந்த வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகள் புதிய அங்கக வேளாண் கொள்கை மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முதலில், அங்கக வேளாண்மை என்ற சொல்லாடல் பலருக்கும் புதிதாகத் தெரிந்தது. இதுவரை இயற்கை வேளாண்மை அல்லது மரபுவழி விவசாயம் என்ற பயன்பாடுதான் புழக்கத்தில் உள்ளது. அதாவது, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதே இயற்கை வேளாண்மை என்ற புரிதல் இருந்தது.

ஆனால், உரங்களை சொந்த பண்ணையில் தயாரிப்பது, விவசாயம் செய்யும் இடத்திற்கு அருகே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விளைச்சல் எடுப்பதே இயற்கை வேளாண்மை என்றும் பண்ணைக்கு வெளியில் இருந்து சந்தையில் கிடைக்கும் உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களைக் கொண்டு விவசாயம் செய்வது அங்கக வேளாண்மை என்றும் தமிழ்நாடு வகுத்துள்ள அங்கக வேளாண்மை கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கக வேளாண்மையின் முக்கிய நோக்கம்

  • மண் வளத்தை அதிகரிப்பது, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது
  • ஏற்றுமதியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவது
  • அங்கக வேளாண்முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்குச் சான்றிதழ் பெறுவது
  • விவசாய பொருட்களில் நச்சுத்தன்மையை பகுப்பாய்வு செய்வது

அங்கக வேளாண்மைக்கான தேவை

தமிழ்நாடு அரசு அங்கக வேளாண்மையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. உடனடி மாற்றமாக இல்லாமல், ரசாயன உர விவசாயத்தில் இருந்து மெள்ள மீளும் நடவடிக்கையாக அந்த நகர்வு இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அங்கக வேளாண்மைக்கான தேவை குறித்துக் கேட்டபோது, ”ரசாயன மருந்துகளைக் கொண்டு நடைபெறும் விவசாயம் காரணமாக, பூச்சிக்கொல்லி எச்சங்கள் உணவுச் சங்கிலியில் நுழைந்து உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதை உலக சுகாதார மையம் நிரூபித்துள்ளதால், அங்கக வேளாண்மைக்கு நகர்வது அவசியமாகிறது.

அதே நேரம், அந்த மாற்றத்தை தீவிரப்படுத்தாமல், இயல்பான மாற்றமாக அதனை கட்டமைக்க இந்த கொள்கை உதவும். விவசாயிகளுக்கு ஏற்ற விலை கிடைக்கவேண்டும், அதேநேரம் அந்த உணவுப் பொருளை வாங்கும் சக்தி மக்களுக்கு இருக்கவேண்டும் என்பதால், நீடித்த முறையில் இந்த மாற்றத்தை செயல்படுத்துவோம்,” என விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறுகிறார்.

விவசாயிகளுக்கு என்ன நன்மை?

அங்கக வேளாண்மை கொள்கை உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த அரியனுர் ஜெயச்சந்திரன் என்ற விவசாயி, பிபிசி தமிழிடம் இந்த கொள்கை செயல்படுத்தப்படும்போது விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று விளக்கினார்.

கடந்த 23 ஆண்டுகளாக ரசாயனமின்றி நெல், நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகிறார் ஜெயச்சந்திரன்.

இயற்கை வேளாண்மை

பட மூலாதாரம், Getty Images

”அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர்க்கடன், உயிர் உரங்கள், உயிரி இடுபொருட்கள் மானிய விலையில் தரப்படும் என்று அரசு முன்மொழிந்துள்ளது வரவேற்கத்தக்கது. பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் விதை வங்கி, மரபணு வங்கி, பண்ணை கழிவு, உரக் கூடங்கள் அமைக்கப்படும் என்பதால், தற்போது ரசாயன உர விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூட தங்களது நிலத்தில் அங்கக வேளாண்மையை ஒரு சிறு நிலப்பரப்பில் தொடங்க முடியும்.

ரசாயனமில்லா உணவுப்பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு அங்கக வேளாண் பொருட்களுக்குச் சான்றளிக்கும் நடைமுறையைக் கொண்டுவருவதால், சர்வதேச சந்தையில் எங்கள் விளைபொருட்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும், ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரிக்கும்,” என்கிறார் விவசாயி ஜெயச்சந்திரன்.

தமிழ்நாட்டில் அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள், விளைச்சல் பொருட்களைச் சந்தைப்படுத்த சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல இடங்களில் நேரடியாகப் பொருட்களை விற்பது, சிறப்பு அங்காடி நடத்துவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படும் என விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறுகிறார்.

மேலும் எல்லா மாவட்டங்களிலும் அங்கக உணவுத் திருவிழாக்களை தமிழ்நாடு அரசு நடத்தும் என்றும் அங்கக வேளாண்மை கொள்கையின் செயல்பாடுகள் ஐந்து ஆண்டுகள் கழித்து விவசாயிகளின் வருமானம் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு சீராய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அங்கக வேளாண்மைக்கு மாறும் நேரமா?

இயற்கை வேளாண்மை

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள முயற்சி அங்கக வேளாண்மைக்கு மாறும் முதல்படி என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கும்போது, அதற்கான தேவையும் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார் விவசாயிகள் நல செயற்பாட்டாளரும், அங்கக வேளாண்மை கொள்கை வரைவு குழுவில் இடம்பெற்ற வல்லுநருமான அனந்து.

”உலகம் முழுவதும் ரசாயன உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கும் உணவுப் பொருட்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. ஆனாலும், ரசாயன உரங்களை முற்றிலும் புறக்கணித்து அங்கக வேளாண்மைக்கு மாறுவது என்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு ஒதுக்கியுள்ள நிதி ரூ.38,904 கோடியில் ரூ.26 கோடி மட்டும் அங்கக வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இது சிறு ஒதுக்கீடாகத் தெரிந்தாலும், இந்த ஆண்டு நாம் பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளோம். கிராமம், நகரம் என எல்லா பகுதிகளிலும் விழிப்புணர்வு அதிகரிக்கும். மக்களின் தேவையை ஒட்டி உள்நாட்டுச் சந்தையிலும் அங்கக வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்,”என்கிறார் அனந்து.

அங்கக வேளாண்மைக்கு மாறுவது குறித்து விளக்கிய தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் இளங்கீரன், படிப்படியான மாற்றம்தான் தேவை என்றும் அதிரடியான மாற்றம் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்.

”பல கிராமங்களில், விவசாயிகள் தங்களது நிலத்தில், ஒரு சிறு பகுதியில் தங்களது தேவைக்கான பொருட்களை அங்கக வேளாண்மை முறையில் பயிரிடுகின்றனர்.

தற்போது, அரசாங்கம் கொடுக்கும் ஊக்கம் மேலும் அந்த நிலப்பரப்பை ஓரளவு அதிகரிக்க உதவும். உடனடியாக அங்கக வேளாண்மைக்கு மாறினால், உணவுப்பொருள் உற்பத்தி பலமடங்கு குறைந்துவிடும்.

எடுத்துக்காட்டாக, ஒரு ஏக்கர் நிலத்தில், ரசாயன முறையில் 40மூட்டை நெல் விளைந்தால், அங்கக வேளாண் முறைப்படி 15மூட்டைகள்தான் எடுக்கமுடியும்.

குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் ரசாயன முறைக்கு இணையான உற்பத்தியை அங்கக வேளாண் முறையில் பெறமுடியும் என்பதால், அதிரடியாக மாறுவதற்குப் பதிலாக, உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வழியில் நடைமுறைப்படுத்துவதுதான் நீடித்த மாற்றமாக இருக்கும்,’ ‘என்கிறார் இளங்கீரன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »