Press "Enter" to skip to content

தகுதி நீக்கம் ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலத்தை முடக்குமா? பிரகாசமாக்குமா?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

சூரத் நீதிமன்றம் ஒன்றால் தண்டிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவரது எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. இந்த நடவடிக்கை ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலத்தை முடக்குமா? 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறித்து, அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது. ராகுல் காந்திக்கு பிணையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்வதாக நாடாளுமன்றச் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் பல முக்கியமான தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. கர்நாடக மாநிலத்திற்கு மே மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நவம்பரில் சட்டீஸ்கர், மிஸோராம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆகவே ஆறு மாநிலத் தேர்தல்கள் இந்த ஆண்டிற்குள் வரவிருக்கின்றன.

இந்த விவாகாரம் காங்கிரசிற்குச் சாதகமாக இருக்க வேண்டுமானால், காங்கிரஸ் இதனை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதைவிட, மக்கள் மன்றத்தில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

“இந்த அவதூறு வழக்கை குஜராத் நீதிமன்றத்தில், வேகப்படுத்தி தீர்ப்பு வாங்கியிருக்கிறார்கள். இப்போது மேல் முறையீடு செய்ய நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்தாலும், இவர்கள் கால அவகாசமே கொடுக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம், அதானியைப் பற்றி ராகுல் காந்தி பேசியதுதான். இதனால்தான் அவர்கள் வேகப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே, ராகுல் காந்தியைப் பார்த்து பா.ஜ.க. பயப்படுகிறது என்பது தெரிகிறது.

கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நாடாளுமன்ற செயலகம் உடனடியாக எதிர்வினையாற்றுவது மிக மோசமாக இருக்கிறது. ராகுல் காந்தி மேல் முறையீடு செய்யும்போது, அந்த நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்தால், இந்தத் தகுதி நீக்கம் என்னவாகும்? காங்கிரசைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தை நீதிமன்றங்கள் மூலமாக தீர்க்க முயல்வதைவிட, மக்கள் மன்றங்கள் மூலமாக தீர்க்க முயல வேண்டும். இந்த விவகாரத்தில் சட்டத்திற்கான இடம் மிகக் குறைவு” என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

ஆனால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பலனளிக்குமா என்பதற்கான சோதனைக் களமாக கர்நாடக மாநிலத் தேர்தலே இருக்கும் என்கிறார் அவர். “விரைவில் நடக்கவுள்ள கர்நாடக மாநிலத் தேர்தலில் என்ன நடக்கிறது என்பதுதான் நமக்கான குறியீடு. கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றால் முக்கியமான திருப்புமுனையாகிவிடும். அதிலிருந்து ஒரு வேகம் கிடைக்கும். ஆனால், மாறாக பா.ஜ.க. வென்றால் காங்கிரசிற்குப் பெரும் பின்னடைவாகிவிடும். இப்போதைக்கு அரசியல் ரீதியாக பார்த்தால், காங்கிரசிற்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியிருக்கிறது” என்கிறார் பன்னீர்செல்வன்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

இதற்கு முன்பாகவும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இது நேர்ந்திருக்கிறது. நெருக்கடி நிலைக்குப் பிறகு அமைந்த ஜனதா அரசு தடுமாறிக்கொண்டிருந்தபோது, 1978ல் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட இந்திரா காந்தி அபார வெற்றிபெற்றார்.

அந்தத் தேர்தல் இந்திரா காந்தியின் செல்வாக்குப் பற்றிய கருத்துக் கணிப்பாக இல்லை என்றாலும் அவரைத் தோற்கடிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்ட ஜனதா அரசுக்கு பெரும் பின்னடைவாகவே அந்தத் தேர்தல் பார்க்கப்பட்டது.

ஆகவே அவரது பதவியை முடக்க அப்போதைய ஜனதா அரசு முடிவுசெய்தது. நெருக்கடி நிலைகால அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.சி. ஷா தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கமிஷன் தனது அறிக்கையில், சஞ்சய் காந்தியின் மாருதி தேர் திட்டம் பற்றி விவரங்கள் சேகரித்த நான்கு அதிகாரிகளை இந்திரா காந்தி வாட்டி வதைத்தார் என ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்திரா காந்தி மீது குற்றவியல் வழக்கு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கவே, மாருதி தேர் நிறுவனம் பற்றிய விவரங்களை அந்த அதிகாரிகள் சேகரித்தார்கள். அந்த அதிகாரிகளைத் துன்புறுத்தியது, நாடாளுமன்றத்தின் மீதான உரிமை மீறல் என இந்திரா காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவர் பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் தனது அறிக்கையை வழங்கிய உரிமைக்குழு, இந்திரா காந்தி குற்றவாளி எனக் கூறியது. அந்த உரிமைக் குழு முன்பாக ஆஜராக இந்திரா மறுத்ததால், அவர் நாடாளுமன்றத்தையும் அவமதித்ததாகக் கூறியது.

இதனால் அவரை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றவும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும்வரை சிறை தண்டனை விதிக்கவும் வாக்கெடுப்பின் மூலம் 1978 டிசம்பர் 19ஆம் தேதி தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஒரு வார காலம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்போது ராகுல் காந்தி சொல்வது போன்ற வார்த்தைகளையே இந்திராவும் குறிப்பிட்டார். “நான் மிகவும் சிறிய மனிதர். ஆனால் சில மதிப்பீடுகளை உயர்த்திப்பிடிக்கிறேன்”. அவர் சிறைக்குச் செல்லும்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டார்கள். ஒரு வார காலம் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தவுடன் நேரே சிக்மகளூருக்குச் சென்றார். அவருக்கு அங்கே ஏகப்பட்ட வரவேற்புக் கிடைத்தது. 1980ல் அவர் மீண்டும் பிரதமரானார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகுதான் ராகுல் மீது கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இது ராகுலுக்கு ஏற்படுத்தும் இழப்பைவிட இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்திற்கு ஏற்படுத்தும் இழப்பு மிக மோசமானது என்கிறார் இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான பி. சாய்நாத்.

“இந்தியாவில் அரசியல் கலாச்சாரம் எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதற்கான அறிகுறி இது. நூற்றுக்கணக்கான வழக்குகள் இதுபோல நடந்துகொண்டிருக்கின்றன. பவன்கேரா வழக்கில் அவரைக் கைது செய்ய அசாம் காவல்துறை தில்லிக்கு வந்தது. அதானி குறித்து எழுதியதற்காக பரஞ்சய் குஹா தாகுர்தா மீது 6 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இப்போது இப்படி ஒரு முடிவு வந்திருப்பதால், இதுபோல மேலும் பல எஃப்ஐஆர்களைப் பதிவுசெய்ய இது ஊக்கம் கொடுக்கும்.

பாரத் ஜோடோ யாத்திரைக்குக் கிடைத்த வரவேற்பையடுத்தே ராகுல் காந்தி மீது இப்படி ஒரு தாக்குதலைத் தொடுக்கிறார்கள். இது பா.ஜ.கவிற்கு பூமராங் ஆகவும்கூடும். ஆனால், இப்போதைக்கு அதானி விவகாரத்தில் இருந்து கவனம் திரும்பியிருக்கிறது. அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும்” என்கிறார் சாய்நாத்.

ராகுல் காந்தி, இந்திரா காந்தி அல்ல. மேலும் அவரது பாட்டி எதிர்கொண்டது பலவீனமான ஜனதா அரசை. ஆனால், இப்போது ராகுல் எதிர்கொள்வது மிக மிக பலம்வாய்ந்த ஒரு அரசை. ஆகவே, இந்த ஒரு நிகழ்வு மட்டுமே, அவருக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துவிடாது. ஆனால், இதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகள் என்ன, அவற்றை ராகுல் எப்படிக் கையாளப் போகிறார் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »