Press "Enter" to skip to content

பூமியில் உருவான முதன்முதல் பெருமாள் கோவில் எது தெரியுமா?!

பெருமாளுக்கு உகந்த இந்த சனிக்கிழமை மாலைவேளையில் பெருமாள் இப்பூமியில் முதன்முதலில் கோவில் கொண்ட இடம் பற்றியும் அந்த கோவிலை பற்றியும் அறிந்துக்கொள்வோம்.

அனைத்து ஜீவராசிகளையும் கட்டிக்காத்து நல்வழிப்படுத்த நினைத்த விஷ்ணு பகவான், வைகுண்டத்தை விட்டு புவியில் அவதரிக்க நினைத்து தேர்ந்தெடுத்த இடம்தான், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் ஆகும். தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் மிக பெரிய பழமையான பெருமாள் கோவில்இதுவெனவும் சொல்லப்படுகிறது

சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான். பின் தேவர்களின் அறிவுரையின்படி இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை வணங்கி தனது குறைகள் நீங்கப்பெற்றான். ஒருநாள் தேவர்கள் பெருமாளை இதே இடத்தில் எப்போதும் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணை கூர்ந்து தேவதச்சன் விஸ்வகர்மாவை அழைத்து தன்னைப் போலவே ஒரு விக்கிரகத்தை நியமிக்கும்படி கூறினார்.  தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயம் நிர்ணயித்து அதில் பிரதிஷ்டையும் செய்து வைத்தார். பெருமாளும் தேவர்களின் வேண்டுகோளின்படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவில்  திராவிடக் கட்டடக்கலையின்படி இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாகவும்,  பின்னர்  விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.  இக்கோயில் வளாகம்  ஐந்து  ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும்  ரங்கநாத பெருமாள் மகாபலிச் சக்ரவர்த்தி மற்றும் ஆழ்வார்களுக்கு முற்பட்டவராக சொல்லப்படுகிறது. இக்கோயிலின் ராஜகோபுரமானது  உயரம் குறைந்து கோபுரம்  மொட்டை வடிவில் உள்ளது.  மேலும் கோயிலானது உயரமான கருங்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. கருவறையில் உள்ள ரங்கநாதபெருமாள் உருவமானது  சயன கோலத்தில் 29 அடி நீளத்தில் கிரானைட் கல்லால் செய்யப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளுடன் பெருமாளுக்கு குடையாக  காட்சியளிக்கிறார்.  ஸ்ரீதேவியும், பூதேவியும் இத்தலத்தில் கால்பகுதியில்  கருடன்     வணங்கிய கோலத்திலும் ,கருவறை முன்பு ஆழ்வார் மண்டபமும் உள்ளது. தாயார் ரங்கநாயகிக்கு தனியாக ஒரு கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென் கிழக்கு மூலையில் செங்கல்லால் கட்டப்பட்ட வரலாற்றுகால தானிய சேமிப்பு கொள்கலன் (களஞ்சியம்) உள்ளது. இந்தக் களஞ்சியமானது திருரங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் மற்றும் பாபநாசம் பாலைவனநாதர் கோவில்களில் உள்ளது போல உள்ளது. இது கோயிலுக்கு விவசாயிகள் அளிக்கும் தானியங்களை சேமித்து வைக்கும் ஏற்பாட்டின்படி கட்டப்பட்டிருக்கிறது.

இக்கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடக்கின்றது. சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடக்கின்றது.   வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி மற்றும் ஆடிப்பூரம் ஆகிய விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவில் ஸ்ரீரங்கம்  ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் கோவில் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோவில் தமிழ்நாடு  இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும்ம் புதர் மண்டிய வண்ணம் பராமரிப்பு இன்றி ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் இருப்பது பெருமாள் பக்தர்களை மனம் நோகச் செய்கிறது. அவற்றையெல்லாம் சுத்தப்படுத்தி பக்தர்கள் மனம் மகிழ செய்ய அரசாள்பவர்களும், ஆதிப்பெருமாளும் மனம் வைக்கவேண்டும்..

The post பூமியில் உருவான முதன்முதல் பெருமாள் கோவில் எது தெரியுமா?! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »