Press "Enter" to skip to content

சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்…. நெகிழ்ந்து போன நடிகர்

உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் ஒருவர், அவை சமூக இடைவெளியை கடைபிடித்ததை பார்த்து நெகிழ்ந்து போனாராம்.

சிக்பள்ளாப்பூர் அருகே நந்திமலை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவ்வாறு நந்திமலைக்கு சுற்றுலா வருபவர்கள், அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவு வழங்குவார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நந்திமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நந்திமலையில் உள்ள குரங்குகள் உணவுகள் கிடைக்காமல் பரிதவித்து வந்தன. 

இதுபற்றி அறிந்ததும் கன்னட நடிகர் சந்தன்குமார், நந்திமலைக்கு சென்று அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு பழங்கள் வழங்கினார். அந்த குரங்குகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டன. குரங்குகளுக்கு பழம் வழங்கியதை சந்தன்குமார் படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘சமூக விலகல் குறித்து நான் கற்றுக்கொண்ட பாடம். 

நாம் எப்போது இந்த சமூக விலகலை கற்றுக்கொள்ள போகிறோம்?. மக்கள் கூட்டமாக வருவதை சமாளிப்பதை விட 500 குரங்குகளுக்கு உணவளிப்பது எளிதானது’ என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »