Press "Enter" to skip to content

ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற துணை நடிகர் கைது

ஊரடங்கை மீறி காரில் மதுபானம் விற்ற சினிமா துணை நடிகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபானங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி யாராவது சட்டவிரோதமாக மதுபானம் விற்கிறார்களா? என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.கே.நகர், பிருந்தாவன் நகர் பகுதியில் ரிஸ்வான் (வயது 30), என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றபோது எம்.ஜி.ஆர். நகர் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர், சினிமாவில் துணை நடிகராக நடித்து வருவது தெரிந்தது. அவரிடமிருந்து 69 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.2,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ரிஸ்வான் துணை நடிகர் என்பதால் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிந்தது.

அதேபோல் விருகம்பாக்கம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தசரதபுரம், மீன் மார்க்கெட் அருகில் காரில் வந்து மதுபானம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், சூளைமேட்டை சேர்ந்த தேவராஜ்(40), சாலிகிராமத்தை சேர்ந்த பிரதீப்(31) என்பது தெரிந்தது. 

2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 189 மது பாட்டில்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான துணை நடிகர் உள்பட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »