Press "Enter" to skip to content

அப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை – விருது பற்றி இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தான் பெற்ற விருதுகளை திருப்பி கொடுக்க போறதா வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது. 

அதனால் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது. இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா புகார் செய்தார்.

இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள அனுமதி கோரினார். இதற்கு அனுமதி அளித்து, இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள், அவர் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் உள்ளிட்ட 160 பொருட்கள், 7 பீரோக்கள் அனைத்தும் 2 பார வண்டிகளில் எடுத்து செல்லப்பட்டன.

இந்நிலையில் இசையமைப்பாளர் தீனா பத்திரிகையாளர் சந்திப்பில், 50 ஆண்டு காலம் இந்திய திரைப்படத்திற்குத் தன் இசைப் பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தைப் பெற்றுத் தந்த இளையராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கிய விருதைச் சங்கத்தின் மூலமாகத் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அந்த அளவுக்கு மனமுடைந்துள்ளார்” என்று கூறினார்.

இதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்து காணொளி வெளியிட்டுள்ளார். அதில், நான் சொல்லாத கருத்தை சொன்னதாக செய்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறு. விருதுகள் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்ற கருத்தை நான் வெளியிடவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »