Press "Enter" to skip to content

வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் நாகேஷ் – கமல் ஆதங்கம்

நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன், தமிழக அரசுக்கு அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பிறந்தநாளான இன்று, அவரது நினைவுகளைப் போற்றும் விதமாக சமூக வலைதளங்களில் பிரபலங்களும், ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் நாகேஷின் நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ், இந்திய திரைப்படத்தின் இணையற்ற நடிகர்களுள் ஒருவர். 1,000 திரைப்படங்களுக்கும்மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.

1958-ல் ‘மனமுள்ள மறுதார’த்தில் அறிமுகமாகி 2008-ல் ‘தசாவதாரம்’ வரை மிகச் சரியாக அரை நூற்றாண்டு நீடித்தது அவரது கலைப்பயணம். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதோ, விருதுகள் அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன்பொருட்டே வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.

1974-ல் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது, 1994-ல் ‘நம்மவர்’ திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் சிறந்த துணை நடிகர் விருது ஆகியவைதான் அவரது கலைவாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள். என்னைப் பொருத்தவரையில் திரைப்படத்தின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ். 

இவர் ஃப்ரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் இவருக்கான கௌரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை யூகித்துப்பார்க்கிறேன். அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும்கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது, ஒரு சககலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தையளிக்கிறது.

இந்த மகத்தான நடிகரின் கலைப் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும். கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »