Press "Enter" to skip to content

நீட் தேர்வால் என் குடும்பத்திலும் ஒரு தற்கொலை நிகழ்ந்திருக்கிறது – சாய் பல்லவி

மாணவர்களின் வலியையும், பிரச்சினைகளையும் உணர்கிறேன், அதனால் நான் எப்போதும் அவர்கள் பக்கம் தான் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பயத்தால் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவ படிப்பு படித்துள்ள நடிகை சாய் பல்லவி, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: “மருத்துவம் என்பது ஒரு கடல் போன்ற படிப்பு. இதில் தேர்வின்போது எதிலிருந்து கேள்விகள் வரும் என்று சொல்ல முடியாது. அதனால் மனதளவில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். பெற்றோர்களும் நண்பர்களும் தான் மாணவர்களுடன் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும் .

என் குடும்பத்திலும் நீட் தற்கொலை சோகம் நிகழ்ந்திருக்கிறது. மதிப்பெண் குறைந்து விட்டதால் எனது உறவினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இத்தனைக்கும் அவர் மோசமான மதிப்பெண் எடுக்கவில்லை. ஆனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டது. அதனால் அவர் அத்தகைய முடிவை எடுத்துவிட்டார்.

தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று என்னால் எளிதில் பேசிவிட முடியும். ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். அந்த தேர்வை அவர்கள் எந்த நிலையில் இருந்து எழுதினார்கள் என்று பார்க்க வேண்டும்.

பதினெட்டு வயது கூட ஆகாத மாணவர்கள் இவ்வளவு இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது வேதனை அளிக்கிறது. மாணவர்களின் வலியை உணர்கிறேன். பிரச்சினைகளையும் உணர்கிறேன். நான் எப்போதும் அவர்கள் பக்கம் தான்” என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »