Press "Enter" to skip to content

ஆங்கில படத்தை பார்த்து புகழ்ந்த மிஷ்கின்

பிசாசு 2 படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் மிஷ்கின், ஆங்கில படத்தை திரையரங்கத்தில் பார்த்து புகழ்ந்து பதிவு செய்திருக்கிறார்.

எ கொயட் பிளேஸ் 2 என்ற ஆங்கில திரைப்படம் தற்போது திரையரங்கத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்த இயக்குனர் மிஷ்கின் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், நேற்று இரவு ஆங்கிலத் திரைப்படம் எ கொயட் பிளேஸ் 2 வை எனது பிசாசு – 2 குழுவினருடன் பார்த்து வியந்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தைப் பார்த்து வியந்திருந்தேன். இரண்டாவது பாகம் வருகிறது என்று அறிவித்த பொழுது முதல் பாகம் அளவிற்குச் சுவராசியமாய் இருக்காது என நினைத்தேன்.

ஆனால் இன்று பார்த்தவுடன் எனது கணிப்பு தவறானதென உணர்ந்தேன். எ கொயட் பிளேஸ் 2 நூறு சதவீதம் சுவராசியமாய் இருந்தது. என்னோடு படம் பார்த்த அனைவரும் இருக்கையின் நுனியிலிருந்து பதட்டத்துடன் பார்த்து ரசித்தனர். திரைப்படத்தின் இயக்குநரும், எழுத்தாளருமான ஜான் கிரஸ்ன்ஸ்கி இந்த பத்து வருடத்தில் ஹாலிவுட் திரைப்படம் கண்டு பிடித்த திறமையான படைப்பாளி.

எ கொயட் பிளேஸ் 2

வேற்றுக்கிரக வாசிகள் மனித சமூகத்தை வேட்டையாடுவது தான் கதை. இந்த மெலிதான கருவை எடுத்துக் கொண்டு, திரைக்கதையில் மாயம் செய்திருக்கிறார். தாயும் மூன்று குழந்தைகளும் கொண்ட ஒரு குடும்பம், அதிலும் ஒரு கைக்குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி வேற்றுக்கிரக வாசிகளைப் போராடி வெல்கிறார்கள் என்பதை ஓர் அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

தாயாக நடிக்கும் எமிலி பிளெண்ட் மிக நேர்த்தியாக தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். இரண்டு குழந்தைகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். நடிகர் கிலியன் மர்பியும் தனது பாத்திரத்தைச் செம்மையாகச் செய்திருக்கிறார். இதன் இசையமைப்பாளர் மார்கோ பெல்டிரமியின் இசை உள்ளத்தை வருடுகிறது. பயத்தைக் கூட்டுகிறது. இத் திரைப்படம் ஓர் உணர்ச்சி குவியல். இந்த திரில்லர் திரைப்படத்தைத் திரையரங்கில் வந்து பார்க்கும் பொழுதுதான் இதன் தொழில் நுட்பத்தையும், பிரமாண்டத்தையும் உணர்வீர்கள். இந்த கோவிட் காலத்தில் நமக்கு எ கொயட் பிளேஸ்-2 ஒரு திருவிழா தான்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »