Press "Enter" to skip to content

சட்டம் – ஒழுங்கு குறித்து ஆலோசனை…முதலமைச்சர் வழங்கப்போகும் அறிவுரை என்னென்ன?

சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சட்டம் – ஒழுங்கு குறித்த ஆலோசனை :

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்  தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11:30 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அதேசமயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காணொலி காட்சி வாயிலாக கூட்டத்தில் இணைகின்றனர். 

விரிவான ஆலோசனை :

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும், அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொலை, கொள்ளை குறித்தும், போக்சோ வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகளுக்கு அறிவுரை :

மேலும், இணையவழி குற்றசம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரைகள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய முடிவுகள் :

அதேபோல், தமிழகம் முழுவதும் நிலவும் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும், குற்ற வழக்குகளில் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

முன்னதாக, சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதைமருந்து புழக்கம் அதிகமாகி விட்டதாகவும் குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »