Press "Enter" to skip to content

தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயக படுகொலை…நிச்சயம் பதில் கொடுப்போம் – உத்தவ்தாக்கரே!

உண்மையான சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது ஜனநாயக படுகொலை என்று உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் உட்கட்சி மோதலால் பிளவு ஏற்பட்டது. இந்த பிளவு காரணமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற பெற்றனர். இதனால் முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார். இதையடுத்து கடந்தாண்டு ஜூன் மாதம் பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணியில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே. துணை முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவும், அதிமுக சின்னமும் எங்களுக்கு தான் என்று ஈபிஎஸ்க்கும், ஓபிஎஸ்க்கும் நடக்கும் மோதல் போக்கை போலவே, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் சின்னம் யாருக்கு என்ற போட்டி நிகழ்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சிவசேனா கட்சி மற்றும் வில் அம்பு சின்னத்திற்காக ஷின்டே தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகியது.

அப்போது, சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றதும், அக்கட்சியின் சின்னமான வில் அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய உரிய சான்றுகளை சமர்பிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, சின்னம் தொடர்பான ஆவணங்களை இரு தரப்பும் சமர்பித்தது. அதில் நாங்கள்தான் உண்மையான சிவசேனா என்பதால், ஷிண்டே இதில் உரிமை கோர முடியாது என உத்தவ் தாக்ரே தரப்பு குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிக்க : சூடுபிடித்த மகாராஷ்டிரா அரசியல் களம்…சிவசேனா கட்சி, சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

இந்நிலையில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தான் சட்டப்பூர்வமான சிவசேனா கட்சி என்றும், கட்சியின் வில் – அம்பு சின்னம் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் என்றும் அதிரடியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மும்பை பெருநகர மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று வெளியான இந்த அறிவிப்பின் மூலம் ஏக்நாத் ஷிண்டே அணி உற்சாகமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு தகுதியின் அடிப்படையிலானது என்றும், ஜனநாயகத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும் ஏக்நாத் ஷிண்டே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதேபோல், தனது டிவிட்டர் பக்க புகைப்படத்தையும் உடனடியாக மாற்றிய அவர், அதில், சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்ரேவுடன், வில் அம்பு சின்னத்தையும் அப்டேட் செய்துள்ளார். இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை ஷிண்டே ஆதரவாளர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். 

ஒரு புறம் சந்தோஷம் என்றால், மறுபுறம் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள உத்தவ் தாக்ரே, இந்த முடிவு ஜனநாயக படுகொலை என விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »