Press "Enter" to skip to content

ரூ.7.50 லட்சம் லஞ்சம் கொடுத்து குரூப்-4 தேர்வில் தேர்ச்சி- கைதான நபர்கள் மீது குற்றச்சாட்டு

சென்னை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தி 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்துள்ளது. 

மேலும், டி.என்.பி. எஸ்.சி. அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், அரசு ஊழியர்கள், முறைகேடு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். 

அவ்வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்தவரை செல்போன் சிக்னல் மூலம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் விக்னேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர்கள் இருவரும் இடைத்தரகருக்கு தலா 7.50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள், முறைகேடு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் என இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »