Press "Enter" to skip to content

பாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க இந்திய படைகளுக்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகாது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி:

டெல்லியில், பிரதமரின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே காஷ்மீரில் பிரச்சினை இருந்து வருகிறது. சில குடும்பங்களும், அரசியல் கட்சிகளும் பிரச்சினைகளை உயிர்ப்புடன் வைத்திருந்தன. அதனால் அங்கு பயங்கரவாதம் செழித்து வளர்ந்தது.

ஆனால், பல்லாண்டுகளாக இந்த நாட்டை பிடித்துள்ள பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு முயன்று வருகிறது. தற்போது, காஷ்மீர் மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளும் அமைதியாக இருக்கின்றன. வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுகள் பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தன. அவர்களின் உணர்வுகளை பூர்த்தி செய்துள்ளோம்.

போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட 3 அமைப்புகளுடன் மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம், வரலாற்று சிறப்புமிக்கது.

இந்தியாவிடம் 3 போர்களில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இருந்தாலும், இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது. முந்தைய அரசுகள், இதை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பார்த்தன.

ஏதேனும் நடவடிக்கை எடுக்க அனுமதி தருமாறு நமது ராணுவம் கேட்டால் கூட அவர்கள் அனுமதி அளிக்க மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க இந்திய படைகளுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது.

சுதந்திரம் அடைந்தபோது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்பவர்கள், தேவைப்பட்டால் இந்தியாவுக்கு வரலாம் என்று இந்தியா உறுதி அளித்தது. இது, காந்தியின் விருப்பம்.

1950-ம் ஆண்டு, இந்திய பிரதமர் நேருவுக்கும், பாகிஸ்தான் பிரதமராக இருந்த லியாகத் அலிகானுக்கும் இடையே இதுதொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. எனவே, இந்தியாவின் நீண்டநாள் வாக்குறுதியைத்தான் நாங்கள் நிறைவேற்றுகிறோம்.

இந்த நாடுகளில் மதம் காரணமாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு அடைக்கலம் தருவது இந்தியாவின் கடமை. அவர்கள் அந்நாடுகளில் சரித்திர அநீதியை சந்தித்துள்ளனர். அதை சரி செய்யவும், வாக்குறுதியை நிறைவேற்றவும் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால், ஓட்டு வங்கியில் போட்டி போடும் எதிர்க்கட்சிகள், இதை எதிர்க்கின்றன. அவர்கள் யாருக்காக பாடுபடுகிறார்கள்? பாகிஸ்தானில் அந்த மக்கள் சந்திக்கும் கொடுமை, அவர்களது கண்ணுக்கு தெரியவில்லையா? பாதிக்கப்பட்டவர்களில் பட்டியல் இனத்தவரும் உள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவம், துப்புறவு பணிக்கு ஆள் தேவை என்று ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது. அதில், ‘முஸ்லிம் அல்லாதவருக்கு மட்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. அதாவது, பட்டியல் இனத்தவருக்கென அதுபோன்ற வேலையை ஒதுக்கி உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »