Press "Enter" to skip to content

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘கொரோனா’ நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் சிகிச்சை அளிக்க பொது மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை:

சீனாவில் வுகானில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 132 பேர் பலியாகி உள்ளனர். 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சீனாவில் இருந்து வருவோரை கண்காணிக்க நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வருவோரையும் முழுமையாக பரிசோதித்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த நடவடிக்கைகளை எடுக்கு மாறும் மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் மாநில சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சீனாவில் இருந்து கோவை வந்த அந்த நாட்டைச் சேர்ந்த 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. இதனிடையே கொரோனாவைரஸ் பாதிப்புக்கு தனி சிறப்பு வார்டுகளை அமைக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 8 படுக்கைகள் போடப்பட்டுள்ளது. இந்த வார்டில் சிகிச்சை அளிக்க 2 நுரையீரல் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், 2 பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், பொது மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அறிகுறிகளான மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தும்மல், இருமல், தொண்டையில் வறட்சி, காய்ச்சல் போன்றவை இருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது.

இதேபோல் மதுரை விமான நிலையத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விமான நிலைய இயக்குநர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வருபவர்களை முழு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முதல் விமான பயணிகளுக்கு மருத்தவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »