Press "Enter" to skip to content

ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரவு, பகலாக தொடரும் மணல் திருட்டு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஆரணி: ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாற்றுப்படுக்கை ஆகிய பகுதிகளில் இரவு பகலாக மணல் கொள்ளை நடக்கிறது. இதில் ஆரணி அடுத்த கல்பூண்டி, மொழுகம்பூண்டி, எஸ்வி.நகரம், நேத்தப்பாக்கம், மாமண்டூர், விண்ணமங்கலம், தச்சூர், குன்னத்துர், ரகுநாதபுரம், சாணார்பாளையம், ஆரணி டவுன் பகுதியில் உள்ள கமண்டல நாகநதி உள்ளிட்ட பகுதிகளில் மணல் மாபியாக்கள் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால், காவல் துறையினரும், வருவாய் துறையினர் கண்டு கொள்வதில்லை. இதனால், மணல் மாபியாவின் ஆட்கள் தினமும் 100க்கும் மேற்பட நபர்கள் கமண்டல நாகநதி, செய்யாற்றுப்படுக்கையில் காலை முதல் மாலை வரை மணல் சலித்து குவியல் குவியலாக சேகரித்து வைத்து இரவு நேரங்களில் டிராக்டர், டிப்பர் லாரிகளில் கடத்தி செல்கின்றனர்.
    
அதேபோல், ஆரணி டவுன் டிராக்டர்களில், நூதன முறையில் மினி வேன்களிலும், இருச்சக்கர வாகனங்களில் மணலை சிறு, சிறு மூட்டைகளில் கட்டி அவற்றை சிமென்ட் மூட்டைகளில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. அவை மூட்டை ஒன்றுக்கு 200 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆரணி டவுன் பகுதியில் டிப்பர் லாரி, டிராக்டர்களில் மணல் கடத்தி வரும் போது யாருக்கும் சந்தேகம் வராத வகையில்   மணல் மேல் எம்சாண்ட் மணல் நிரப்பி மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கமண்டல நாகநதி, செய்யாற்றுப்படுக்கையில் தொடர்ந்து மணல் சலித்து இரவு, பகலாக மணல் திருட்டு நடைப்பெற்று வருவதால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீராதாரம், குடிநீர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமண்டல நாகநதியில் மணல் சலிக்கும்போது பள்ளி மாணவன் உட்பட இரண்டு தொழிலாளிகள் மணல் சரிந்து உயிரிழந்தனர். மேலும், மணல் கடத்தலில் ஈடுபட்ட வானங்கள் மோதி 10க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் மணல் திருட்டு நடைபெறாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது ஆரணி தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட கமண்டல நாகநதி ஆற்றிலிருந்து  கல்பூண்டிஉள்ளிட்ட பகுதிகளில் இரவு, பகலாக மணல் மாபியாக்கள் மீண்டும் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.    
இதுகுறித்து வருவாய்துறை, தாலுகா போலீசாரிடம் தகவல் தெரிவித்தால் கண்துடைப்பிற்காக மாட்டு வண்டிகளை மட்டும் பிடித்து வழக்கு போடுகின்றனர். அதனால் டிராக்டர், லாரிகளில் விடியற்காலை, இரவு நேரங்களில் மணல் ஓட்டிக் கொள்ளுங்கள் என போலீசார் தெரிவித்துவிட்டு மிகபெரியளவில் மாமூல் வாங்கிக் கொண்டு போலீசார் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். எனவே ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு, பகலாக அதிகரித்து வரும் மணல் கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த அதிகாரிகள் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »