Press "Enter" to skip to content

வெளி மாநில காய்கறிகள் வரத்து அதிரிப்பு மலை காய்கறிகளின் மவுசு குறைகிறது: விவசாயிகள் கவலை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பட்டானி போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு மற்ற இடங்களில் விளையும் காய்கறிகளைவிட ருசி சற்று அதிகம் என்பதால் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கம். அதுமட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுபதி செய்யப்படுகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் வெளி மாநிலத்தில் இருந்து அதிகளவு காய்கறிகள் இங்கு வருவதே. அதேபோல், வெளி மாவட்ட காய்கறிகளும் அதிகளவு கொண்ட வரப்படுகிறது.

கர்நாடக மாநிலம் குண்டல்பேட், ஹாசன், மைசூர் போன்ற பகுதிகளில் அதிகளவு காய்கறிகள் பயிரிடப்படுகிறது. அதே போல் ஒட்டன்சத்திரம் பகுதியிலும் அதிகளவு காய்கறிகள் பயிரிடப்படுகிறது. நீலகிரியில் விளையும் காய்கறிகளுக்கு இணையான சுவை கிடைக்கவில்லை என்றாலும் இந்த காய்கறிகள் சைசில் மிக பெரியதாகவம், விலை குறைந்தும் கிடைக்கிறது. இதனால், மக்கள் ருசியை பார்க்காமல் விலை குறைவான விலையில் கிடைக்கும் இந்த காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும், இந்த காய்கறிகள் அதிகளவு தற்போது சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர் போன்ற பகுதிகளுக்கு இந்த காய்கறிகள் அதிகளவு கொண்டு வரப்படுகிறது. மேலும், சமவெளிப் பகுதிகளில் விளையும் காய்கறிகளும் அதிகளவு கொண்டு வரப்படுகிறது. இதனால், உள்ளூரில் விளைவிக்கப்படும் காய்கறிகளை குறைந்த விலைக்கே விவசாயிகள் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விதை, உரம், பூச்சிக் கொல்லி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாலும் தொழிலாளர்கள் கூலியும் அதிகரித்துள்ளதால் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டபின் பெரும்பாலான விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தையே முழுமையாக நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனால், சந்தையில் போதிய விலை கிடைப்பதில்லை. நீலகிரி மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான சிறு விவசாயிகளின் தேயிலை தோட்டங்கள் சமவெளிப் பகுதிகளில் உள்ள பெரும் பணக்காரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அழிக்கப்பட்டு தற்போது கான்கிரீட் காடுகளாக மாற்றப்பட்டு வருகிறது. தற்போது காய்கறி விவசாயமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆங்காங்கே உள்ள காய்கறி தோட்டங்களும் கான்கிரீட் காடுகளாக மாறி வருகின்றன. முழுமையாக இந்த தேயிலை தோட்டங்களும், காய்கறி தோட்டங்களும் கான்கிரீட் காடாக மாறினால், மலை காய்கறிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு ஓட வேண்டிய நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி சத்தான மற்றும் சுவையான காய்கறிகளும் நமக்கு கிடைக்காமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »