Press "Enter" to skip to content

மனைவி 5வது இடம், தம்பி 3வது இடம், தம்பி மனைவி 6வது! டிஎன்பிஎஸ்சி மோசடி.. அதிர வைத்த சென்னை எஸ்ஐ

சென்னை: சென்னையைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் மனைவி, இரண்டு தம்பிகள், தம்பியின் மனைவி ஆகிய நான்கு பேர் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வில் முதல் பத்து இடங்களில் தேர்ச்சி பெற்றிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் 4 பேரும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து குரூப் 2 தேர்வு முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை கழுகுப்பார்வையுடன் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ்(39), எரிசக்தித் துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன்(35), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

imageஉளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்.. ஆலோசிக்கும் உள்துறை.. ரஜினிக்கு விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பா?

பணம் கொடுத்தவர்கள்

இடைத்தரகர்களாக செயல்பட்ட சென்னை ஆவடியை சேர்ந்த வெங்கட்ரமணன், தேனிமாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்த பாலசுந்தர்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இதேபோல் இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து முதல் நூறு இடங்களுக்குள் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், கடலூரை சேர்ந்த ராஜசேகர், சென்னை ஆவடியை சேர்ந்த காலேஷா, திருவல்லிகேணியை சேர்ந்த நிதீஷ்குமார், ராணிப்பேட்டையை சேர்ந்த கார்த்தி, திருவள்ளூரை சேர்ந்த வினோத்குமார், கடலூரை சேர்ந்த சீனிவாசன், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

குரூப் 4க்கு 9 லட்சம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், சுமார் 9 லட்சம் ரூபாய் கொடுத்து தேர்ச்சி பெற்றதாகவும் குரூப் 2 தேர்வில் சுமார் 13 லட்சம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் பணம் எப்படி கொடுக்கப்பட்டது. யார் மூலம் நடந்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

சிபிசிஐடி சந்தேகம்

கடந்த ஆறு நாட்களாக சிபிசிஐடி போலீசார், டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பலரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். டிஎன்பிஎஸ்சி ஊழியர்களில் சிலர் தொடர் விடுமுறையில் சென்றுள்ளார்கள். அவர்கள் ஏன் விடுமுறையில் சென்றார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.

தம்பி, மனைவி. 4 பேர்

இதனிடையே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளராக (எஸ்ஐ ) பணியாற்றி வருகிறார். அவரது மனைவி, குரூப் 2 தேர்வில் தரவரிசைப் பட்டியலில் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார். எஸ்ஐயின் தம்பி குரூப் 2 தேர்வில் தரவரிசைப் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே தேர்வில் காவலரின் தம்பி மனைவி தரவரிசைப் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். அத்துடன் குரூப் 4 தேர்வில் காவலரின் இன்னொரு தம்பி தரவரிசைப் பட்டியலில் 10 இடத்துக்குள் வந்துள்ளார். குரூப் 2 தேர்வு, குரூப் 4 ஆகிய தேர்வுகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள தகவலை தெரிவித்த சிபிசிஐடி போலீசார் அது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »