Press "Enter" to skip to content

கருக்கலைப்பு சட்டத்தில் அதிரடி மாற்றம்.. பெண்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது

டெல்லி: கருக்கலைப்பு விஷயத்தில் முக்கியமான ஒரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியுள்ளது.

தற்போதை சட்டப்படி, 20 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பை அனுமதிக்க முடியாது. இந்த கால வரம்பை 24 வாரங்களுக்கு நீட்டிக்க சட்டத் திருத்தம் வகை செய்கிறது என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

மருத்துவ கருக்கலைப்பு (சட்டத் திருத்தம் 2020) என்று இதற்கு பெயர். Medical Termination of Pregnancy Act (1971) இதன் மூலம் திருத்தத்திற்கு உள்ளாகிறது.

கடந்த ஆண்டு, கருக்கலைப்பு காலத்தை நீட்டிக்கக் கோரி பொது நல வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்தபோது, ​​கர்ப்பிணிப் பெண்ணின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கருக்கலைப்பு செய்யும் காலத்தை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து அமைச்சகம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.

சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் என்ஐடிஐ ஆயோக் ஆகியவற்றின் கருத்தை வாங்கிய பின்னர், கருக்கலைப்புச் சட்டத்தில் வரைவுத் திருத்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும், பின்னர் அது சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுதாரரும் வழக்கறிஞருமான அமித் சாஹ்னி தாக்கல் செய்த பொதுநல மனு வழக்கில்தான், மத்திய அமைச்சகம் இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

அமித் சாஹ்னி தனது மனுவில் கருக்கலைப்பு காலத்தை 20 வாரங்களிலிருந்து 24 வாரமாக அல்லது 26 வாரங்களாக உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தார். இது தவிர, திருமணமாகாத பெண்கள் மற்றும் விதவைகளையும் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்க உரிமை இருப்பதைப் போலவே, கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையும் பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »