Press "Enter" to skip to content

சிறப்புக் கட்டுரை: காந்தியாரின் மறைவும் தந்தை பெரியாரும்! …27 நிமிட வாசிப்புமகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது எனக்கு எட்டு வயது நிறைவடைய ஏறத்தாழ ம…

எஸ்.வி.ராஜதுரை

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது எனக்கு எட்டு வயது நிறைவடைய ஏறத்தாழ மூன்றரை மாதங்கள் இருந்தன. 30.1.1948 அன்று மாலை; வழக்கம்போல மண்ணெண்ணெய் விளக்குகளுக்கான கண்ணாடிகளை சாம்பல் போட்டு நானும் என் அம்மாவும் துடைத்துக் கொண்டிருந்தோம். ஏறத்தாழ 6.30 மணிக்கு வீடுகளுக்குப் பாலூற்றும் சீத்தாலட்சுமி அம்மாள் என்பவர் மூலம் அந்தச் செய்தி எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. மூச்சிரைக்க ஓடி வந்த அவர் “காந்தியை யாரோ சுட்டுவிட்டார்களாம்” என்று என் தந்தையிடம் கூறினார். என் தந்தை காந்தியவாதி; எங்கள் வீட்டில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட துணியிலிருந்துதான் அவருடைய உள்ளாடைகள் முதல் ஜிப்பாக்கள் வரை தயாரிக்கப்படும்; முருக பக்தர்; கிருத்திகை தவறாமல் பழநி முருகன் கோயிலுக்குச் சென்று கிரிவலம் வருவார். ஆனால், அவருக்கு முன்கோபம் அதிகம். சீத்தாலட்சுமி அம்மாளைத் திட்ட வாயெடுத்தார். ஏனெனில் சீத்தாலட்சுமி அம்மாள், பால் விற்பதுடன் நடமாடும் வம்பு தும்பு ‘பத்திரிகையாளராக’வும் இருந்தார்; ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு, எங்கள் தெருவிலிருந்து இன்னொரு தெருவுக்கு ‘செய்திகள்’ எடுத்துச் செல்பவர். அவற்றில் சரிபாதியைக் கழித்துவிடலாம்.

ஆனால், இந்த முறை அவர் எங்கள் குடும்ப நண்பரும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் குறைந்தது ஐந்து முறை சிறை சென்றவருமான ஒருவரின் வீட்டிலிருந்து அந்தச் செய்தியைக் கொண்டுவந்திருந்தார். நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனி முத்திரை பதித்த ‘சரஸ்வதி’ ஏட்டை நிறுவியவரும் கம்யூனிஸ்டுமான வ.விஜயபாஸ்கரனின் தந்தை பா.து.வடிவேல் பிள்ளையின் உடைமைகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருமுறை ஜப்தி செய்யப்பட்டிருக்கின்றன. என் பெற்றோருக்குத் திருமணமான புதிதில் வடிவேல் பிள்ளை ஒருமுறை சில முக்கிய பாத்திரம் பண்டங்களை எங்கள் வீட்டில் ஒப்படைத்திருக்கிறார் என்று என் அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் வீட்டிலிருந்து 10 நிமிடத்தில் நடந்தே சென்றடையக்கூடிய, எங்கள் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளியிருந்த, வறுமையில் வாடிக்கொண்டிருந்த அவர் வீட்டில் மட்டுமே எங்களுக்குத் தெரிந்தவரை எங்கள் நகரத்தின் அந்தப் பகுதியில் ஒரு வானொலிப் பெட்டி இருந்தது. காந்தி சுடப்பட்டது பற்றிய செய்தியைத் தன் காதாலேயே கேட்டதாக அழுது புலம்பிக்கொண்டே கூறினார் சீத்தாலட்சுமி அம்மாள். வீட்டுக்கு வெளியே வந்த நாங்கள், எங்கள் தெருவைச் சேர்ந்த பலர் வடிவேல் பிள்ளை வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். எங்கள் வீட்டிலும் அண்டை வீடுகளிலும் பெரும் அழுகைக் குரல்கள்.

வடிவேல் பிள்ளை வீட்டுக்குச் செல்லாமல் நகராட்சி மன்றத்தால் பராமரிக்கப்பட்டு வந்த ‘ராஜா பார்க்’ என்னும் பூங்காவுக்கு மின்னல் வேகத்தில் என்னை இழுத்துக்கொண்டு சென்றார் என் தந்தை. அங்கு வானொலிப் பெட்டி இருக்கும். சொந்த வானொலிப் பெட்டி இல்லாதவர்கள் அங்கு கூடி செய்திகளைக் கேட்பதும் என்னைப் போன்ற சிறு பிள்ளைகள் அங்கு ஓடித் திரிந்து விளையாடுவதும் வழக்கம். அன்று அரை மணி நேரத்துக்கு ஒரு முறைதான் அகில இந்திய வானொலி நிலையச் செய்தி. இடையில் சோகமான வீணை இசை. ஒவ்வோர் அரை மணி நேரமும் எங்களுக்கு ஒரு யுகம் போல இருந்தது. காந்தி சுடப்பட்டு இறந்துவிட்டார் என்பதை வானொலி நிலையம் உறுதிப்படுத்தியது. இரவு எட்டரை மணிக்கு மேல் பூங்காக் கதவை மூடிவிடுவார்கள். எனவே வீடு திரும்ப வேண்டியிருந்தது.

அந்தச் செய்தி பொய்யாக இருக்குமோ, காந்தி உயிர் பிழைத்துவிட மாட்டாரோ என்ற ஏக்கத்தில் அன்றிரவை ஊணும் உறக்கமுமின்றிக் கழித்தோம். மறுநாள் மாலையில்தான் பழஞ்சோற்றை மோரில் கரைத்து எங்கள் அம்மா கொஞ்சம் கொடுத்தார். சென்னையிலிருந்து வரும் நாளேடுகள் ஈரோடு வரை ரயிலில் வந்து பின்னர் பேருந்து மூலமாக எங்கள் ஊருக்கு, காலை சுமார் ஏழரை மணிக்குத்தான் வந்து சேரும். என் தந்தை கடைக்குச் சென்று முண்டியடித்துக்கொண்டு ஏதோவொரு நாளேட்டை வாங்கி வந்தார். குண்டு துளைக்கப்பட்ட காந்தியின் உடலைக் காட்டும் புகைப்படத்தைப் பார்த்த பிறகும்கூட அன்று மாலை வரை காந்தி இறந்துவிட்டார் என்று நாங்கள் மட்டுமல்ல, எங்கள் தெருவில் இருந்த அனைவருமே நம்ப மறுத்துவிட்டோம். அவரது உடல் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட பிறகும்கூட காந்தியின் இறப்பு செய்தியை நம்புவது கடினமாக இருந்தது.

1952இல்தான் பெரியாரின் பேச்சை முதன்முதலில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது என்றாலும், 1980களின் இறுதியிலிருந்துதான் அவரது எழுத்துகளையும் பேச்சுகளையும் ஆழமாகப் படிக்கத் தொடங்கினேன். (இத்தனைக்கும் நான் 16.6.1972இல் உதகையில் பெரியார் உரையாற்றிய அரங்கக் கூட்டமொன்றுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பும் பெற்றிருந்தேன்.)

சாதி ஒழிப்புக் கண்ணோட்டத்திலிருந்தும் காங்கிரஸ் தேசியவாதத்துக்கு எதிரான நோக்குநிலையிலிருந்தும் காந்தியின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் அண்ணல் அம்பேத்கரையும் பெரியாரையும் போலக் கடுமையாக விமர்சித்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால் காந்தி கொலையுண்ட செய்தியைக் கேட்டதும் பெரியாரைப் போலப் பதறிப் போனவர்கள், நிம்மதி குலைந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் அல்லாத வேறு யாரும் இருந்திருக்க முடியாது. (ஏனெனில் இருவருமே அகிம்சாவாதிகள்; வன்முறை வழி நாடாதவர்கள்; கொலை செய்தல் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்காதவர்கள்.)

காந்தி கொலையுண்டதைக் கேட்டு சங்கிகளும் இந்து மகா சபைக்காரர்களும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியபோது, பெரியாரோ மனம் பதைபதைத்து எழுதினார்:

“காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாயிருந்தது. இது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும், மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறியிருக்கும். மதமும் வைதிகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் பலமான சதிமுயற்சி இருந்தே இருக்க வேண்டும். அது காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ – உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும்… இப்பெரியாரின் பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல்–மதயியல் கருத்து வேற்றுமையும், கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்” (விடுதலை, 31.1.1948; வே.ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், சிந்தனையாளர் கழகம், திருச்சி, 1974, ப.1924).

காந்தியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் ‘குடி அரசு’ அலுவலகத்தில் 2.2.1948 அன்று நடத்தப்பட்டதுடன், அந்த அலுவலகத்துக்கு விடுமுறையும் விடப்பட்டது (குடி அரசு, 7.2.1948).

இப்படிப்பட்ட செயல்கள் ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா அலுவலகங்களில் நடந்தன என்று இன்றைய சங்கிகளாலோ ‘துக்ளக் தர்பார்’ நடத்துபவர்களாலோ சொல்ல முடியுமா?

“இவரது முடிவைக் கேட்டதும் மக்களுக்குத் திடுக்கிடும் தன்மையும், அலறிப் பதறித் துடிதுடித்துத் துக்கப்படும் தன்மையும் இதுவரை நம் நாட்டுக்கு வேறு எவருடைய முடிவும் தந்ததில்லை” என்று ’குடி அரசு’ 7.2.1948ஆம் நாள் இதழில் வெளியிடப்பட்ட ‘காந்தியார் முடிவு’ என்ற தலையங்கத்தில் எழுதிய பெரியார் கூறினார்:

“கம்யூனிஸ்டுகளும், சமதர்மவாதிகளும் காந்தியின் கொள்கையில் எவ்வளவு குறை கண்டாலும், அவரிடத்தில் மதிப்பும் மரியாதையும் வைத்தவர்களாகவே இருந்து வந்தார்கள். வெள்ளையர்கள் மீதில் இந்தியர்களுக்கு எப்படிப்பட்ட குரோத மனப்பான்மை ஏற்பட்ட காலத்திலும், வெள்ளையர் அரசாங்கம் காந்தியாரை மதிப்பதிலோ, அவரைப் பாதுகாப்பதிலோ சிறிதும் தவறியதில்லை. அனுபவத்துக்கு ஏற்றதோ, ஏற்காததோ என்று கவலையற்று காந்தியார் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு இலட்சியவாதியாகவே இருந்த பெரியவராவார். ஆதலால், அவரிடம் சொந்த விருப்புவெறுப்புக் கொண்டு அவரை எவரும் வெறுத்ததில்லை.

வருணாசிரம தர்மத்தைக் காப்பதில் காந்தி பிடிவாதமாக இருந்தார் என்பதால்தான் திராவிடர் கழகத்தார் அவரிடம் முரண்பாடு கொண்டிருந்தனர் என்றும், அந்த வருணதர்மக் கொள்கையையும் காந்தி கைவிடும் நிலையில் இருந்தார் என்றும் வடநாட்டு பனியாக்களின் நிர்பந்தம் அவர் மீது இல்லாமல் இருந்திருந்தால் அவர் வேறுவிதமாக இருந்திருப்பார் என்றும் அத்தலையங்கம் கூறியது.

திராவிடர் கழகத்தின் சார்பில் எல்லா ஊர்களிலும் 29.2.1948 அன்று காந்தியாரின் மறைவுக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று பெரியார் விடுத்த அறிக்கை (குடி அரசு, 21.2.1948), அவற்றுக்கான விதிமுறைகளையும் வகுத்துத் தந்தது. நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண், வல்லபபாய் பட்டேல் முதலியவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் பெரியார், இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் காந்தி முதன்மைப் பாத்திரம் வகித்ததால் இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயரிட வேண்டும் என்றும் கூறியிருந்தார் (குடி அரசு, 14.2.1948.)

காந்தியார் இறந்த ஒரு மணி நேரத்திற்குள் கொலையாளியின் அடையாளமும் பின்னணியும் சந்தேகத்துக்கிடமின்றி முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்துக்கு அறிவிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அனைத்திந்திய வானொலி நிலையமோ அன்றிரவு ஏழரை மணிக்கு ஒலிபரப்பிய செய்தியில் காந்தியைச் சுட்டவன் “அநேகமாக ஓர் இந்துவாக இருக்குமென்று நம்பப்படுகிறது” என்று கூறியது. இப்படிப்பட்ட செய்தி அறிவிப்பு, “ஒரு முஸ்லிம்தான் இந்துவாக வேடம் போட்டிருக்க வேண்டும்” என்று பலராலும் புரிந்துகொள்ளப்பட வழிசெய்ததால் ஈரோட்டில் வரலாறு காணாத அளவுக்கு முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்களின் உடைமைகள் நாசமாக்கப்பட்டன (குடி அரசு, 7.2.1948, ப.6)

எங்கள் ஊருக்கும் இப்படிப்பட்ட வதந்திகள் பரவியது என் நினைவில் உள்ளது. என் அப்பாவின் கிராமத்தில் இருந்தவர்களில் ஐந்தில் இரு பகுதியினர் தமிழ் பேசும் முஸ்லிம்கள். பெரும்பாலும் பாய் பின்னுபவர்களாகவோ விவசாயம் செய்பவர்களாகவோ இருந்த அவர்கள் எங்களை மாமன், மாப்பிள்ளை உறவு வைத்து அழைப்பார்கள். நான் பிறந்து வளர்ந்த ஊரில் உருது பேசும் முஸ்லிம்கள் கணிசமாக இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஷமிகள் சிலர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பழிக்கும் வகையில் அவ்வப்போது கோஷம் போடுவார்கள். அர்த்தம் புரியாத எங்களைப் போன்ற சிறுவர்கள் அதைக் கேட்டு சிரிப்பர் (கொஞ்சம் வளர்ந்து பெரியவனாகியதும்தான் தெரிந்தது, இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக ஏற்பட்ட விருப்புவெறுப்புகளின் வெளிப்பாடாகத் தோன்றியவைதான் அந்த முழக்கங்கள் என்பது.) ஆனால், அப்படிப்பட்ட முழக்கங்கள் நீடித்து நிற்கவில்லை என்பதோடு, முஸ்லிம்கள் மீது எந்த அசம்பாவித சம்பவமும் நடந்ததாக என் நினைவுக்குத் தெரிந்த அளவில் ஏதும் இல்லை. ‘ரேடியோவில் பேசி நாய்க்கர் சமாதானம் செய்தார்’ என்று என் அப்பா கூறினார். எனக்கு ஏதும் விளங்கவில்லை.

காந்தியைக் கொன்றவன் கோட்ஸே என்ற சித்பவன் பார்ப்பனன் (’சித்பவன்’ என்றால் நெருப்பால் தூய்மையாக்கப்பட்டவன் என்று பொருள்!) என்பது தெரிந்தவுடனேயே, மகாராஷ்டிராவில் பார்ப்பனர்கள் மீது தாக்குதல் தொடங்கியது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மீது இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் நடக்காமல் செய்யப்பட்டதற்கு பெரியார் 31.1.1948இல் திருச்சி வானொலி நிலையத்தில் ஆற்றிய உரை முக்கிய காரணம். நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பெரியார் வானொலி உரையில் கூறியதால் தமிழகத்தில் பார்ப்பனர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை. காந்தி கொலை பற்றி பெரியார் எழுதியதையும் பேசியதையும் முழுமையாக அறிந்துகொண்ட பிறகுதான் ‘ரேடியோவில் பேசி நாய்க்கர் சமாதானம் செய்தார்’ என்று 1948இல் என் தந்தை கூறியதன் பொருளைப் புரிந்துகொண்டேன்.

காந்தியாரைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியவர்கள், கொலைக்காரன் கேட்ஸேவுக்கு கைத்துப்பாக்கி கொடுத்தவன் ஆகியோர் அனைவரும் பார்ப்பனர்களே. லாரி காலின்ஸ், டொமினிக் லாபியெ ஆகிய வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ள ‘Freedom at Midnight’ என்னும் நூலில் காணப்படும் அவர்களது புகைப்படங்களே கீழே உள்ளவை (இந்த நூல் ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டு சென்னையிலுள்ள ‘அலைகள் பதிப்பக’த்தால் வெளியிடப்பட்டுள்ளது.) அந்தப் புகைப்படங்களுக்குக் கீழே நூலாசிரியர்களால் தரப்பட்டுள்ள தலைப்புகளில் கொலைச் சதியில் சம்பந்தப்பட்டவர்கள் என கைது செய்யப்பட்டவர்களின் தனிப்பட்ட ஒழுக்கக்கேடுகள் என்று சொல்லப்பட்டவற்றை மட்டும் இங்கு நாம் தவிர்த்திருக்கிறோம்.

image

கல்லூரியொன்றிலுள்ள விவாத சங்கத்தின் உறுப்பினர்கள் ஆண்டு மலருக்கான புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதுபோல காந்தியைப் படுகொலை செய்தவர்கள் தங்கள் மீதான கொலை வழக்கு விசாரணை வருவதற்கு முன் போஸ் கொடுக்கிறார்கள். உட்கார்ந்திருப்பவர்களில் இடதிலிருந்து வலமாக: நாராயண் ஆப்தே, 34, – தூக்கிலிடப்பட்டான்; ‘வீர’ சாவர்க்கர், 65, அவர் பெயரால்தான் இந்தக் குற்றம் இழைக்கப்பட்டது –விடுதலை செய்யப்பட்டார்; நாதுராம் கோட்ஸே, 39, கொலைசெய்தவன் – தூக்கிலிடப்பட்டான்: விஷ்ணு கார்கரெ, 34, – ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டான்; நிற்பவர்கள்: ஷங்கர் கிஸ்தயா, பாட்கெவின் வேலைக்காரன்; குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுப் பின்னர் மேல்முறையீட்டில் விடுதலை; கோபால் கோட்ஸே, 29, கொலைக்காரனின் சகோதரன் – ஆயுள்தண்டனை; மதன்லால் பாஹ்வா, 26, பஞ்சாபிலிருந்துவந்த அகதி; தன் தந்தையின் உடல் சிதைக்கப்பட்டதற்குப் பழி தீர்க்க சபதம் எடுத்துக்கொண்டவன் – ஆயுள் தண்டனை; திகம்பர் பாட்கெ, 37, துறவி போல வேடம்பூண்டிருந்த ஆயுத வணிகன் – அரசுத் தரப்பு சாட்சியாகி விடுதலையடைந்தவன்.

image

மேற்சொன்ன எட்டுப் பேரும் கைது செய்யப்பட்ட பின் போலீஸாரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

ஆனால் சில பார்ப்பனப் பத்திரிகைகளோ முஸ்லிம்கள் மீது பழி போட முயன்றன. அது பற்றிப் பெரியார் எழுதினார்:

“தென்னாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் காந்தியாரைச் சுட்டவன் பார்ப்பனன் என்பதை வேண்டுமென்றே மறைத்து – மக்கள் முஸ்லிம்கள் மீதும், காங்கிரஸுக்கு மாறுபட்ட கருத்துக்கொண்டவர்கள் மீதும் பாயும்படியான அயோக்கியத்தனமாக மறைத்தும் திருத்தியும் பிரசுரித்தார்கள். அது மாத்திரமா என்று பார்த்தால், ‘கருப்புச் சட்டைக்காரர்கள் கலாட்டா’ என்ற தலைப்புக் கொடுத்து மக்களை அவர்கள் மீது கிளப்பியிருக்கிறார்கள். இந்தக் காரியத்தை ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையே முதன்முதலாய் தைரியமாய்க் கையாண்டிருக்கிறது. உண்மையாக இந்த நாட்டில் ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ என்ற இரண்டு பேயாட்ட, வெறி கிளப்பும் விஷமப் பத்திரிகைகள் இல்லாமல் இருக்குமானால் – இந்த நாடு எவ்வளவோ முன்னேற்றமடைந்து, இந்த நாட்டு மக்கள் எவ்வளவோ அந்நியோன்ய பாவமடைந்து ஞானமும், செல்வமும் ஆறாகப் பெருகும் நன்னாடாக ஆகி பல்லாண்டுகள் ஆகியிருக்கும். இன்றைய கலவரங்களிலும், கேடுகளிலும், நாசங்களிலும் 1000-ல் 999 பாகமும் இல்லாமல் இருந்திருக்கும்.

இப்பத்திரிகைகள் தங்கள் சாதியார் செய்யும் அயோக்கியத்தனங்களையெல்லாம் ‘பொது மக்கள் ஆத்திரம்’ என்று போட்டுவிட்டு (கருப்புச் சட்டைக்காரர்கள் செய்தார்களோ இல்லையோ) கருப்புச் சட்டைக்காரர்கள் நடத்தையைக் குறிப்பிடும்போது, ‘கருப்புச் சட்டைக்காரர்கள் கலாட்டா’ என்று போடுவதன் காரணம் வேறு என்னவாய் இருக்க முடியும்? இந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ஆட்சி ஏற்பட்டாலும், ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ என்னும் இந்த இரண்டு விஷ ஊற்றுகளும் ஒழிக்கப்பட்டால் ஒழிய மக்களுக்குத் துவேஷம், குரோதம், வஞ்சகம் என்ற விஷ நோய்கள் நீங்கப் போவதில்லை என்று உறுதியாய்க் கூறுவோம். இந்தச் சமயத்தில் பார்ப்பனர் செய்யும் அயோக்கியத்தனங்கள் ஏராளமாய் இருக்கும்போது, அவர்களை மறைத்து சுட்டவன் சாதியைக்கூட மறைத்துவிட்டு, ‘கருப்புச் சட்டைக்காரன் கலாட்டா’ என்று எழுதுவதானது சர்க்கார் அடக்குமுறையைப் பார்ப்பனர்கள் பக்கம் திருப்புவதை விட்டு – கருப்புச் சட்டைக்காரர் பக்கம் திருப்புவதற்கல்லாமல் வேறு எதற்காக இருக்க முடியும்? இந்தப்படி செய்ய மற்ற கூட்டத்தினருக்குப் பெயரைக் கொடுத்து அது பிரசுரித்ததா?

இப்படிப்பட்ட யோக்கியர்கள் உள்ள நாட்டில் – எப்படி சாதி, வகுப்பு ஒற்றுமை இருக்க முடியும்? மேலும், துவேஷம், பிரிவு ஏற்படாமல் எப்படி இருக்க முடியும்? மக்களுக்கு வெறி ஏற்பட்டிருக்கும் சமயத்தில் ‘கருப்புச் சட்டைக்காரர் கலாட்டா’ என்று எழுதினால் அதனுள்ள மர்மம் என்னவாய் இருக்க முடியும்?

எனவே பார்ப்பனீய விஷம் மதம் அழிக்கப்பட்டால் ஒழியச் சாந்தியும் சமாதானமும் இந்த நாட்டுக்கு ஏற்படுவது அருமையிலும் அருமையாகத்தான் இருக்கும். வருணாசிரம தர்மப் பிரிவு கொண்ட பார்ப்பன மதம் வேண்டவே வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். அது உள்ளவரை நாட்டில் இன்றுள்ள கேடுகள் எல்லாம் இருந்துதான் தீரும்” (குடி அரசு, தலையங்கம், 7.2.1948)

அன்று ‘இந்து’ என்று பெரியார் குறிப்பிட்டது ஆங்கில ஏடான ‘தி ஹிந்து’வை. அது இன்று முற்போக்கான, ஜனநாயகக் கருத்துகளை வெளியிடும் ஏடாகி விட்டது. ஆனால் அன்றைய ஆங்கில ‘தி ஹிந்து’வின் இடத்தை இப்போது ‘தி இந்து தமிழ் திசை’ பிடித்துக் கொண்டுவிட்டது. ’சுதேசமித்திரனி’ன் இடத்தில் அமர ஏராளமான பார்ப்பனப் பத்திரிகைகள் போட்டி போடுகின்றன.

மேற்சொன்ன தலையங்கத்தில் வல்லபபாய் பட்டேல் அன்று எதிர்கொண்ட விமர்சனங்களையும் பெரியார் சுட்டிக் காட்டினார்:

“நேருவின் நண்பரும் சமதர்மக் கட்சித் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் வெட்ட வெளிச்சமாகவே, இதை – அதாவது ‘பாதுகாப்பு மந்திரி (சர்தார் பட்டேல் அவர்கள்) அந்தப் பாதுகாப்பு இலாகாவுக்குத் தகுதி அற்றவர்’ என்று சொல்லுகிறார். பொதுமக்களும் இந்தக் கொலைக்கு சர்தார் பட்டேல் மீது பழி போட இடமிருக்கிறது என்று கருதுகிறார்கள். காந்தியார் உயிருடன் இருக்கும்போது, ‘எனக்கும் பட்டேலுக்கும் விரோதம் இருப்பதாகக் கருதாதீர்கள்’ என்று சொல்லி, அவர் மீது மக்களுக்கு உள்ள தப்பபிராயத்தை மாற்ற முயன்றிருக்கிறார். சர்தார் பட்டேல் அவர்களும், ‘காந்தியார் பட்டினியின்போதே (உண்ணாநோன்பின்போதே – எஸ்.வி.ஆர்.) செத்து இருந்தால் நன்மையாக இருந்திருக்கும்’ என்று தனது துக்க செய்தியில் நுழைத்துச் சொல்லியிருக்கிறார்…”

வரலாற்றாய்வாளர் க்ளாட் மார்கோவிட்ஸ், The UnGandhian Gandhi: The Life and Afterlife of the Mahatma என்னும் நூலில், காந்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகளுக்கு வல்லபபாய் பட்டேல் பொறுப்பேற்க வேண்டியிருந்ததாலேயே காந்தி கொலை வழக்கு துரிதமாக நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் தொடர்ந்து எழுதுகிறார்:

”ஆகவே பண்டித நேரு அவர்களும், இராஜகோபாலாச்சாரியார் அவர்களும் அவர்கள் விலகுவதற்கு முன்போ, ஓய்வெடுத்துக் கொள்வதற்கு முன்போ, ‘காந்தியார் பலியாக்கப்பட்டதன் காரணமாய் இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாசிரம தர்ம முறை – அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை) முறை இனி கிடையாது; வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்த சுயராஜ்ஜியத்தில் இனி அனுஷ்டிக்கப்படக் கூடாது; இவை ஒழியும்படியாக, அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும்’ என்று சுயராஜ்ய சர்க்காரால் ஏற்பாடு செய்துவிடுவார்களேயானால் – இந்த நாட்டைப் பிடித்த எந்த கேடும், ஒரே அடியாய் தீர்ந்துவிடும். இதைச் செய்த உடனே அப்புறம் ஓர் உத்தரவு போட்டுவிடலாம். அதாவது, ‘பிறவி சாதி முறை எடு(க்கப்)பட்டுவிட்டதால் இனி இந்த நாட்டில் பிராமணர் பாதுகாப்பு சங்கமோ, பிராமணர் சேவா சங்கமோ, வன்னியகுல சத்திரியர் மகாஜன சங்கமோ, நாடார் மகாஜன சங்கமோ, வாணிப வைசிய சங்கமோ, மருத்துவர் சங்கமோ, அருந்ததியர் சங்கமோ மற்றும் இப்படிப்பட்ட பல பல சாதி – வகுப்பு சங்கமோ இனிச் சட்டவிரோதமாகக் கருதப்படும்; அதனதன் தலைவர்களும் பிரமுகர்களும் பந்தோபஸ்தில் வைக்கப்பட்டு அவர்கள் சொத்துகளைப் பறிமுதல் செய்யப்படும்’ என்று உத்தரவு போட்டுவிடலாம். பிறகு நமக்கு என்னதான் வேண்டும்? தானாகவே சமதர்மமும், பொதுவுடைமையும், தனித்தனி நாடு சுதந்திரமும் தாண்டவமாடும்.”

கருணையும் கனிவும் அன்பும் நிறைந்த பெரியாரின் நெஞ்சம் கொள்கை வேறுபாடுகளையெல்லாம் மறந்துவிட்டு, காந்தி என்ற தனிப்பட்ட மனிதரின் தன்னலமற்ற தன்மையைப் போற்றியது. அனைத்திந்திய அளவில் நேரு, தமிழக அளவில் காமராஜர் போன்ற விதிவிலக்கான மனிதர்களைத் தவிர காங்கிரஸ் கட்சியும் அது அமைத்த அரசாங்கங்களும் பின்னாளில் மேற்கொண்ட நடவடிக்கைகள், உலகில் இருந்த, இருக்கின்ற பாசிசங்களில் எல்லாவற்றிலும் பார்க்க மிக நீண்டகாலமாக இருந்துவரும் இந்துத்துவ பாசிசத்தை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிவதற்கான தீவிரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்பதோடு அதை ஊக்குவிக்கவும் செய்துள்ளன.

கட்டுரையாளர் குறிப்பு

image

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »