Press "Enter" to skip to content

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுரை

கோவை:  கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.989.80 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை  விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுரை வழங்கினார்.கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக  வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி  அலுவலகத்தில் நடந்தது.இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்ததாவது:    கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.989.80 கோடி மதிப்பில் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளலூர்  பகுதியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், கவுண்டம்பாளையம் பகுதியில் சூரிய மின் சக்தி பணிகள், பசுமை பூங்காக்கள் அமைத்தல், பாதாள  சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள், காற்றுத் தரம் கண்காணிக்கும் கருவி, உக்கடம் சூரிய மின்சக்தி நிலையம் அமைத்தல் போன்ற பல்வேறு  பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

 மேலும் பெரியகுளம் வடகரை புனரமைத்தல், வாலாங்குளம் குறுக்கே நடைபாதை அமைத்தல் பணி, வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ்  மேம்பாட்டு செய்தல் பணி, செல்வசிந்தாமணிகுளம், கிருஷ்ணம்பதிகுளம், செல்வம்பதி, குமாரசாமி குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் ஆகிய  9 குளங்களில் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திவான் பகதூர் சாலை மாதிரி சாலை, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், 24*7 குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும்  வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல், வீடு வீடாக குப்பைகள் சேகரிக்க வாகனம் போன்ற அனைத்து பணிகளையும் தரமானதாக விரைந்து முடிக்க  வேண்டும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார்  ஜடாவத்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்  கே. அர்ச்சுணன்,  பி.ஆர்.ஜி. அருண்குமார், மாநகராட்சி  துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி, மாநகர பொறியாளர் லட்சுமணன் மற்றும் அலுவலர்கள்  பலர் கலந்து  கொண்டனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »