Press "Enter" to skip to content

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு

சினாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 170 உயிர்களை பலி வாங்கி உள்ளது. மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

அத்துடன், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள், சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு மருத்துவ வார்டுகள் அமைக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகிக்கப்படும் நோயாளிகள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சீனாவில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய வாலிபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்தள்ளது. இதன்மூலம் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவர், தனிமைப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர் சீனாவின் உகான் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். 

சீனாவில் இருந்து இதுவரை 806 கேரளா திரும்பியுள்ளதாகவும், நேற்று மட்டும் 173 பேர் கேரளா வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் கூடிய 10 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »