Press "Enter" to skip to content

ஹை பிட்ச் பாடணுமா.. கூப்பிடுங்க ராகவேந்தரை.. உணர்ச்சி குவியலான முகம்.. மறக்க முடியாத கம்பீர குரலோன்!

சென்னை: “ஹை பிச் பாடணும்.. கூப்பிடுங்க ராகவேந்தரை”.. “பக்கத்து வீட்டு அங்கிள் போல ஒரு கேரக்டர்.. கூப்பிடுங்க ராகவேந்தரை” இதுதான் டிஎஸ். ராகவேந்தரின் ஸ்பெஷாலிட்டி!! அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று!

வெகு இயல்பான மனிதர்.. எளிமையின் அடையாளம்.. கடினமான உழைப்பு.. இப்படித்தான் தமிழ்திரையுலகில் அறிமுகமானார் எஸ்.ராகவேந்தர்! இவர் ஒரு நடிகர்… பாடகர்… இசையமைப்பாளர் ஆவார்… தமிழக மக்கள் அறிந்த முகம்தான்.. விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரில்தான் ஆரம்ப காலங்களில் பின்னணி பாடி வந்தார். இதற்கு பிறகுதான் நடிப்புக்குள் இறங்கினார்.

சிந்து பைரவி படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.. இசைஞானம் கொண்ட யாரேனும் நடித்தால் நன்றாக இருக்குமே என்று பாலச்சந்தர் தேடி கொண்டிருந்தார்.. அப்போதுதான் வைதேகி காத்திருந்தாள் படம் ரிலீஸாகி இருந்தது.. ரேவதியின் அப்பாவாக நட்டுவாங்க கேரக்டரை பார்த்ததுமே பாலச்சந்தர் மனதில் நின்றவர் ராகவேந்தர்!

imageதேசபக்தி கொண்டவர் என சொல்லிக்கொள்ளப்படும் இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன்

ராகவேந்தர்

இந்த படத்தில், இசைஞானம் மிக்க நீதிபதியாக நடித்திருப்பார்.. ஒரு சீனில் ஆரபி ராகம் என்று தேவகாந்தாரி ராகத்தை ராகவேந்தர் ஆலாபனை செய்ய.. தன்னுடைய முதலாளி என்றும் பார்க்காமல் அது தவறு என்று தர்க்கம் செய்வார் கார் டிரைவராக நடித்த கவிதாலயா கிருஷ்ணன்.. இறுதியில் ஜேகேபியை சந்தித்து பிரச்சனையை சொல்ல.. ராகவேந்திரா தோற்றதாக தீர்ப்பு வழங்கப்பட.. இதற்கு பிறகு அம்பாசிடர் பின் சீட்டில் டிரைவரை உட்கார வைத்து ஜட்ஜ் கார் ஓட்டி வரும் கதாபாத்திரத்தை மிக அருமையாக செய்திருப்பார் ராகவேந்தர்!

பாசமான அங்கிள்

ஒரு பக்கத்து வீட்டு அங்கிள் போன்ற தோற்றத்தை உடையவர் என்பதுதான் இவரது பிளஸ் பாயிண்ட்.. அலட்டி கொள்ளாத நடிப்பு.. முகபாவனைகளாலேயே மொத்த உணர்ச்சியையும் கொட்டி நடிக்கும் திறமைதான், ராகவேந்தருக்கு பல வாய்ப்புகளை தேடி வந்தது. ஒரு பக்கம் நடிப்பு என்றிருந்தாலும், அவரது இன்னொரு பக்கம் நாடி நரம்புகளில் கலந்து விட்டது இசை!

இளையராஜா

இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராக பணியாற்றியவர்.. நூற்றுக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் பாடியவர்.. ‘தியாகச் சாலை’, ‘தேன் சிட்டுக்கள்’ எனப் பல படங்களுக்கு இசையமைப்பாளராக வேலை பார்த்தவர்.. ஹைபிச் பாடணுமா? கூப்பிடு ராகவேந்தரை என்று சொல்லும் அளவுக்கு தன்னை இசை உலகில் பதியமிட்டுக் கொண்டவர்.. அதிலும் இளையராஜாவின் பல பாடல்களை இவர் ஏராளமாக பாடியுள்ளார்.

அழகு மலராட..

அவை எல்லாமே கேட்ட பாடல்கள்தான்.. நம்மையும் அறியாமல் உள்ளூர ஓடிக்கொண்டிருக்கும் பாடல்கள்தான்.. ஆனால் இவர்தான் இந்த பாடலை பாடினாரா என்பது பலருக்கும் இசை உலகினர் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை.. ஹிட் பாடல் என்றாலும் பின்னணியில் ஒரு குரல் சன்னமாக ஒலித்தாலோ, அல்லது உச்சஸ்தாயியில் ஒலித்தாலோ, அது பெரும்பாலும் ராகவேந்தராவின் குரலாகத்தான் இருக்கும்! அழகு மலராட பாடலில் ஜதி சொல்லுவதாகட்டும், ஏய் அய்யாச்சாமி உள்ளிட்ட தனிப்பாடலாகட்டும்… அது ராகவேந்திராவின் குரலுக்கு கிடைத்த அங்கீரம் மட்டுமே!

கல்பனா

இவரது மகள் பிரபல பின்னணி பாடகி கல்பனா என்பது அனைவரும் அறிந்த உண்மை.. 5 வயதிலேயே பாடகி ஆனவர்.. குழந்தை நட்சத்திரம்தான்.. அப்பாவும் – மகளும் இணைந்து நடித்த படங்களும் உண்டு! மிகப்பெரிய வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற்று, இன்று பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். பார்வைத்திறனை இழந்த தந்தைக்கு ஒரு தாயாக மாறியிருக்கிறார்.

அட்வைஸ்

“உனக்கான திறமையை மட்டுமே சொல்லி உன்னை நீதான் அடையாளப்படுத்திக்கணும்..” என்பதே மகளுக்கு அப்பா தந்த ஒரே அட்வைஸ்.. தான் என்னதான் திரையுலகில் புகழ்பெற்ற கலைஞனாக இருந்தாலும், மகளுக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை ராகவேந்தர்.. இதற்காகவே குழந்தையில் இருந்தே மகளை மேடைக் கச்சேரி ஏற்றி.. பாடிப் பாடியே அவருக்கான அடையாளத்தை தானாக கிடைக்க செய்தவர் ராகவேந்தர்.

இறுதிக்கட்டம்

கடினமான உழைப்பும், வயோதிகமும் ராகவேந்தரை ஒரு கட்டத்தில் முடக்கியது.. உடல்நலம் குன்றியது.. பார்வை திறனும் பறிபோய் தன் இறுதிக்கட்டத்தை தவிப்புடனேயே கழித்தார்… ஆனாலும் ஒரு குழந்தைபோல இவரை குடும்பத்தினர் அப்படி தாங்கி பிடித்து பார்த்து கொண்டனர்… கனிவுடன் கவனித்து வந்த நிலையில், இந்த அதிர்ச்சியில் இருந்து எப்படி அவர்கள் மீண்டு வருவார்களோ தெரியாது! இன்று ராகவேந்தர் நம்மை விட்டு பிரிந்தாலும்.. உச்சஸ்தாயியில் அவர் விட்டுச் சென்ற ராகங்கள் என்றுமே நமக்கு இந்த ராகவேந்தரை நினைவுபடுத்தி கொண்டே இருக்கும்!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »