Press "Enter" to skip to content

ஓரங்கட்டப்படும் ஜக்கையன் எம்.எல்.ஏ… கோஷ்டிபூசலில் சிக்கித்தவிக்கும் தேனி அதிமுக

தேனி: அண்ணா தொழிற்சங்கப் பேரவை கன்வீனர் பொறுப்பில் இருந்து ஜக்கையன் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டதன் பின்னணியில் தேனி மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி அரசியலே காரணம் எனக் கூறப்படுகிறது.

அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஜக்கையன் அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொறுப்புகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு அதிமுக தலைமை மீது வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், கட்சியில் வேறு பொறுப்பு கேட்டுப்பெறும் எண்ணத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் டிடிவி அணியில் சிறிது காலம் இருந்துவிட்டு அதிமுக முகாமுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் இவர் ஒருவர்.

டிடிவி தினகரனிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் மாநில பதவி கேட்டு அது கிடைக்காததால், ஒருங்கிணைந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிக்கு மாறியவர் ஜக்கையன். அதிமுகவின் ஆட்சியை காப்பாற்றியதில் இவரது பங்கும் முக்கியமானது. இடைத்தேர்தலுக்கு முன்பு வரை ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் ஆதரவும் அரசுக்கும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஜெயலலிதா காலத்தில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கூட அவர் பொறுப்பு வகித்திருக்கிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேனி தொகுதியை தனது மகனுக்கு கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினார் ஜக்கையன். ஆனால், ஓ.பி.எஸ். மகன் போட்டிக்கு வந்ததால் அதில் ஜக்கையனால் வெற்றிபெற முடியவில்லை. இப்போது அண்ணா தொழிற்சங்கப் பேரவை கன்வீனர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டது ஜக்கையனுக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனிடையே இது தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசி கட்சியில் வேறு முக்கிய பொறுப்பு கொடுக்குமாறு கேட்டுப்பெறும் எண்ணத்தில் இருக்கிறாராம் ஜக்கையன்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »