Press "Enter" to skip to content

பொய்யிலே பிறந்து.. பொய்யிலே வளர்ந்து.. நிஜம் போல பொய் பேசும் மாந்தர்கள்!

சென்னை: இப்பெல்லாம் நிறையப் பேர் பொய் பேசுவதை உண்மை போலவே மாற்றி விட்டனர். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பசொன்னா அது உண்மையாகி விடும் என்று நிறையப் பேர் நம்பிக் கொண்டுள்ளனர். அது தவறு. உண்மை எப்பவுமே உண்மைதான்.. பொய் நிச்சயம் ஒரு போதும் உண்மையாக முடியாது.

நல்ல விஷயத்துக்காக பொய் பேசலாம் என வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே என்று கேட்கலாம். ஆனால் எல்லா விஷயத்திலும் பொய் என்பதை எப்படிங்க ஏற்க முடியும். குறிப்பாக குழந்தைகளுக்கு பொய் பேசாதே என்று கற்றுக் கொடுங்கள்.. அதேபோல நீங்கள் இருந்தும் காட்டுங்கள்.. அது உங்களது அடுத்த தலைமுறையையும் ஒழுங்குடன் வளர உதவும்.

இன்றையக் காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் பொய் கூறுகிறார்கள். கள்ளமில்லா உள்ளம் குழந்தை உள்ளம் என்பார்கள். ஆனால் இன்று குழந்தைகளே பல பொய்கள் சொல்கின்றனர். இக்காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தவம். குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்கெல்லாம் பொய் பேச ஆரம்பித்துவிடுகிறது.

குழந்தைகளின் பொய்கள்

எப்படி என்கிறீர்களா குழந்தை தன் அழுகையால் தாயை அழைக்கிறது. பிறகு பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் இன்னும் பொய் கூறுகின்றனர். சாக்லேட் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வரும் குழந்தை தன் தாய் கேட்கும் போது சாப்பிடவில்லை என்று மறுக்கிறது காரணம் உண்மையைச் சொன்னால் அம்மா திட்டுவார். வகுப்பில் பேசினாயா என்று ஆசிரியர்கள் கேட்கும் போது ஆசிரியர் கண்டிப்பார் என்ற காரணத்தினால் அக்குழந்தை பொய் கூறுகிறது.

பயத்தால் வரும் பொய்

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரின் மீதான பயத்தால் குழந்தை பொய் கூறுகிறது. குழந்தைகள் தவறு செய்வது சகஜம். அந்த தவறுக்காக உடனே அவர்களைக் கண்டித்து தண்டனைக் கொடுக்காமல் அக்குழந்தையை அழைத்து அருகில் அமர வைத்து அந்த தவறைச் சுட்டிக் காட்டுங்கள். பொய் சொன்னால் ஏற்படும் விளைவுகளை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். அவர்கள் செய்த தவறைத் திருத்திக் கொள்ள வாய்ப்பளியுங்கள்.

ஏன் பொய் பேசுகிறார்கள்

குழந்தைகள் ஏன் பொய் கூறுகிறது. சிறு வயதில் சட்டையில் ஜாம் இருந்தால் நீதானே கொட்டினாய் என்றுக் கேட்கிறோம். அதற்கு உங்கள் குழந்தை இல்லை என்றுக் கூறினால் உங்கள் குழந்தைக்கான நேரத்தை நீங்கள் ஒதுக்கவில்லை என்றே அர்த்தம். உங்கள் குழந்தை நன்மை செய்யும் போது பாராட்டுங்கள் அதே சமயம் பொய் கூறும் போது அவர்களை அன்பாக அரவணைத்து அறிவுரைக் கூறினால் நிச்சயம் உங்கள் குழந்தை பொய் கூறாது.

குட்டிக் கதை

மகாபாரதத்தில் அர்ஜீனனை வில் வித்தையில் வெல்ல நினைத்த கர்ணண் பரசுராமரிடம் வில் வித்தை கற்கச் சென்றான். அவர் சில விதிமுறைகள் விதித்தார். விதிமுறைகளுக்குட்பட்டால் மட்டுமே பயிற்சியளிப்பேன் என்றார். அதில் அன்றாடம் காலையில் அவர் முதல் நாள் கற்றுக் கொடுத்த பயிற்சியை செய்ய வேண்டும் என்பதும் ஒரு விதிமுறை. ஆனால் அந்த விதிமுறையை கர்ணண் பின்பற்றாமல் பரசுராமர் கேட்ட போது பின்பற்றினேன் என்று பொய்யுரைத்தான். அதன் விளைவாக பாரதப் போரில் அவனால் அர்ஜீனனை வீழ்த்த முடியாமல் கற்ற கலைகளெல்லாம் மறந்துத் தோல்வியுற்றான். அவன் தன் ஆசிரியரிடம் பொய்யுரைத்ததால் தான் இவ்வாறு ஏற்பட்டது என்று பகவான் கிருஷ்ணர் மூலம் அறிந்துக் கொண்டான்.

கற்றுக் கொடுக்கும் பெற்றோர்கள்

பெற்றோர்களிடமிருந்தும் பிள்ளைகள் பொய் கூறக் கற்றுக்கொள்கிறது. ஒரு வீட்டில் தந்தையும் மகனும் இருக்கின்றனர். அந்த சமயத்தில் வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்கிறது. கதவின் ஓட்டை வழியாகப் பார்த்த தந்தை தன் நண்பர் வந்திருப்பதை அறிகிறார். உடனே தன் மகனிடம் சென்று தான் வீட்டில் இல்லை என்று தன் நண்பரிடம் சொல் என்கிறார். அந்த பையன் கதவைத் திறந்து யார் நீங்கள் என்றுக் கேட்கிறான்.அதற்கு அவர் நான் உங்கள் அப்பாவின் நண்பர். அவரைப் பார்க்க வந்திருக்கிறேன். அவர் இருக்கிறாரா என்றுக் கேட்கிறார்.

சிறுவன் சொன்ன பொய்

உடனே அந்தச் சிறுவன் என் தந்தை வீட்டில் இல்லை என்று கூறமாறு என் தந்தைக் கூறினார் எனக் கூறினான். குழந்தைகள் எதிரே பெற்றோர் கூறும் இது போன்ற பொய்களால் அவர்கள் பொய் கூறினால் தவறில்லை எனக் கருதுகிறார்கள். இந்த எண்ணத்தை அறவே ஒழித்திட பெற்றோர்களும் உண்மையையேப் பேச வேண்டும்.

பெருமையும் பொய்தான்

மனிதன் இச்சமூகத்தில் வாழும் போது பிற மனிதர்களிடம் தன்னைப் பற்றிப் பெருமையாகக் காட்டிக் கொள்வது கூடப் பொய் தான்.இந்த சமூகத்தில் பிரச்சினையில்லாமல் அமைதியாகவும் வாழ்வதற்கு பொய் கூறுகிறோம். மனிதன் தனக்கு அறிமுகமில்லாத மனிதரைப் பார்க்கும் போது குறைந்தபட்சம் பத்துப் பொய்யாவது நாம் கூறுகிறோம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

நன்மை எது தீமை எது

குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே நன்மை எது தீமை எது என்று எடுத்துரையுங்கள். பொய் கூறும் போது அவர்களின் மனதில் பதற்றமும் கண்களில் பயமும் தென்படும். உங்கள் குழந்தை தவறு செய்தால் அடிக்காதீர்கள் அல்லது கடுமையான தண்டனை கொடு்க்காதீர்கள். அவ்வாறு செய்தீர்களானால் உங்கள் குழந்தை உங்களிடம் பயந்து பொய் கூற ஆரம்பித்து விடும்.

குழந்தைகளே எப்போதும் உண்மையைப் பேசுங்கள்.உண்மையே உயர்வு தரும். பொய்யால் உயர்ந்தவர் எவரும் இலர். வாய்மையைப் பேசினால் மட்டும் தான் நாம் உயர முடியும்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »