Press "Enter" to skip to content

இரணியல் அரண்மனை ரூ3.85 கோடியில் சீரமைப்பு: பூமி பூஜை இன்று காலை தொடங்கியது

திங்கள்சந்தை: தக்கலையில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இரணியல் அரண்மனை. 6 ஏக்கர் பரப்பளவை கொண்டது. சுமார் 1300 ஆண்டு பழமையான இது சேரர் காலத்தில் கட்டப்பட்டது. தென்னிந்தியாவில் அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய இடமாக அரண்மனை இருந்தது. ஏனென்றால் 16ம் நூற்றாண்டு வரை வேணாட்டின் பருவகால தலைநகரமாக இருந்தது. அரண்மனையில் கடைசியாக உதய மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்தார். அவரது காலத்துக்கு பிறகு பத்மநாபபுரத்துக்கு மாற்றப்பட்டது. மிக பழமை வாய்ந்த இந்த அரண்மனையில் சமீப காலமாக பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. இதனால் பாழடைந்த நிலையில் உள்ளது. பல கட்டிட அமைப்புகள் இடிந்த நிலையிலும், கூரைகள் விழுந்த நிலையிலும் முழுமையாக அழியக்கூடிய நிலையில் உள்ளது.

இது தவிர அரண்மனையில் பல கலைப்பொருட்கள் களவு போய்விட்டதாக தெரிகிறது. இது போன்ற பாரம்பரியமும், பெருமையும் மிக்க நினைவு சின்னங்களை வழக்கமாக தொல்லியல் துறை தான் பராமரிக்கும். ஆனால் இதற்கு மாறாக இரணியல் அரண்மனை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அரண்மனையை பழமை மாறாமல் புனரமைக்க ரூ.3.85 கோடியை 2014ல் தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு அறிவிப்பாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அரண்மனை புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம் தலைமை வகித்து, விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லின்தாஸ், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புணி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அறநிலையத்துறை தலைவர் சிவகுற்றாலம் கூறுகையில், பாரம்பரியமிக்க இரணியல் அரண்மனை ரூ.3.85 கோடியில் புனரமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக குளம், மேற்கூரை உள்ளிட்டவை சீரமைக்கப்படுகிறது. 2ம் கட்டமாக வசந்தமண்டம் மற்றும் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் டெல்லி பிரிநிதி தளவாய்சுந்தரம் முயற்சியால் இப்பணி நடக்கிறது. ஒன்றரை ஆண்டுகளில் இப்பணி முடிக்கப்படும். உடனடியாக 2ம் கட்ட பணியும் தொடங்கப்படும். வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை என்பதால் பழமை மாறாமல் செப்பனிடப்படும். இதுபோல் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் உள்ள தங்க தேரும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »