Press "Enter" to skip to content

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் பாலாற்றில் குப்பைகளை கொட்டும் மாநகராட்சி ஊழியர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் பாலாற்றில் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் கொட்டுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ₹900 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் உள்ள குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் நேரடியாக சென்று சேகரித்து வருகிறார்கள். இதனால் வேலூர் மாநகராட்சி குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம், பொதுமக்கள்  மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். இவ்வாறு பிரித்து பெறப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கும் குப்பைகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் வேலூர் மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும், அதை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தவும் வெளிமாநில அதிகாரிகள் வேலூருக்கு வந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.
ஆனால் வேலூர் மாநகராட்சியின் மறுபக்கம் வேறு மாதிரியாக உள்ளது. அதாவது, மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு கொண்டு செல்லப்படாமல் பாலாற்றில் மாநகராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர். பாலாற்றில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று பலமுறை கலெக்டர் தெரிவித்துள்ளார். ஆனால் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள பாலாற்றில் தினமும் மாநகராட்சி லாரிகள் மற்றும் பேட்டரி குப்பை வண்டிகள்  மூலம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நீர் ஆதாரமும் பாதிக்கப்படுவதாகவும்,  பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது: குப்பைக்கழிவுகளை கொட்டி பாலாற்றின் தூய்மையை அடியோடு கெடுக்கும் பணியை மாநகராட்சியின் துப்புரவுப்பணியாளர்கள் செய்து வருகிறார்கள். காலை, மாலை நேரங்களில் பாலாற்றின் மையப் பகுதிகளுக்கே சென்று குப்பைகளை கொட்டியும் எரித்து வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளில் கொடுக்கும் குப்பைகளை மட்டுமே சேகரித்து வந்தால் மாநகராட்சியின் குப்பைகிடங்கின் உள்ளேயே கொட்டி பிரித்து அழிக்கலாம். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் குறிப்பாக டிரைவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சிலர் மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இயற்கை வளங்களை அழிக்கும் செயலை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏற்கனவே மணல் திருட்டு ஒருபுறம் என்றால் பாலாற்றை பாழாக்கும் வகையில் குப்பைகளை கொட்டுவது, சாக்கடை கழிவுகளை பைப் லைன் அமைத்து பாலாற்றில் கலக்கச் செய்வது என்று செயல்படுகின்றனர். இப்படி இருந்தால் பாலாற்றை எப்படி காப்பாற்றுவது, மீட்பது என்று தெரியவில்லை. எனவே கலெக்டர் பாலாற்று பகுதிகளில் ஆய்வு செய்து குப்பைகளை கொட்டும் மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பாலாற்றை ஓரளவு காப்பற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »