Press "Enter" to skip to content

முதல்வர் உத்தரவை மதிக்காத அமைச்சர்!4 நிமிட வாசிப்புகம்பத்தில் ரவீந்திரநாத்தைத் தாக்க முயற்சி செய்தவர்களைத் திரும்பித் தாக்கியிருக்க முடியும் என அமைச்ச…

கம்பத்தில் ரவீந்திரநாத்தைத் தாக்க முயற்சி செய்தவர்களைத் திரும்பித் தாக்கியிருக்க முடியும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் (ஆவின்) தலைவராக இருந்த ஓ.ராஜா மற்றும் 17 நிர்வாகக் குழு உறுப்பினர்களின் நியமனத்தை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. இந்த நிலையில் தேனி ஆவின் சங்கத்தின் இடைக்காலத் தலைவராக ஓ.ராஜா நேற்று (ஜனவரி 30) பதவியேற்றார். துணைத் தலைவராக செல்லமுத்துவும், நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் ஓ.ராஜா மீண்டும் பதவியேற்றுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஆணைய விதிகளின்படி சில காரணங்களுக்கான இடைக்கால நிர்வாகக் குழு அமைத்தால் அதில் பிரச்சினையில்லை என்று நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே குழு அமைக்கப்பட்டு பதவியேற்றுள்ளனர். விரைவில் ஆவின் தேர்தல் முறைப்படி நடைபெறும்” என்று பதிலளித்தார்.

“கம்பத்தில் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமாரைத் தாக்க வந்தவர்களை எங்களுக்குத் தடுக்கவும் தெரியும். அவர்களது கைகளை முறிக்கவும் தெரியும். மதக்கலவரம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அமைதி காத்தோம்” என்று குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தில் சுபிட்சமாகவும், மக்களுக்கு தொல்லை இல்லாத வகையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆன்மிக ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், “இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் தன்னை இஸ்லாமியர்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் திமுக, அவர்களின் வாக்குகளுக்காக மதவெறி அரசியலைச் செய்துவருகிறது. இஸ்லாமிய இளைஞர்களை திமுக மூளைச்சலவை செய்து வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த 27ஆம் தேதி மாலை முதல் இரவு வரை இருந்து பல அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பாக நாம் வெளியிட்ட செய்தியில், “அமைச்சர்களுக்கு இதுவரை பல முறை வாய்க்கட்டு போட்டும் யாரும் கட்டுப்பட மறுக்கிறார்களே என்று எடப்பாடி பழனிசாமிக்கு வருத்தம் அதிகமாக இருக்கிறது. அதுபற்றி நேற்று அமைச்சர்களிடம் வெளிப்படையாக பேசினார்” என்று தெரிவித்திருந்தோம். மேலும், மீடியாக்கள்ல பேசுறதைக் குறைச்சுட்டு மாவட்டங்கள்ல வேலையைப் பாருங்க என்று முதல்வர் அமைச்சர்களிடம் தெரிவித்ததாகவும் சொல்லியிருந்தோம்.

முதல்வர் இதுவரை பலமுறை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அதை மீறியும் பல அமைச்சர்கள் ஊடகங்களில் பேசிவந்தனர். தற்போது, முதல்வர் கடைசியாக இட்ட உத்தரவு, அமைச்சருக்கான மாண்பு ஆகியவற்றையெல்லாம் மீறி கையை முறிப்போம் எனப் பேசியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »