Press "Enter" to skip to content

குரூப் 4: சிபிஐ விசாரணை நடைபெறுமா?6 நிமிட வாசிப்புகுரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் நாளுக்கு நாள் பலர் கைதாகி வருகின்றனர். இதுவரை 18 பேரைக் கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், “அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. காலம் கடத்தாமல் உடனடியாக சிபிஐக்கு வழக்கை மாற்றினால் உண்மை வெளியே வரும்” என்று தெரிவித்துள்ளார். எனினும் இதை மறுத்த அமைச்சர் ஜெயக்குமார், தயாநிதி மாறனுக்கு எதிராக வழக்கு தொடருவோம் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் குரூப் 4 தேர்வு முறைகேடுகளின் மூலம் அனைத்து குரூப் தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும் என்ற பலமான சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “டிஎன்பிஎஸ்சியில் நடந்துள்ள ஊழல்கள் வெளிவந்துள்ள நிலையில் இதற்குப் பின்னணியாக அதிமுக ஆட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் இருந்துள்ளனர் என்று கருத இடம் உள்ளது. தற்போது நடந்துவரும் விசாரணை முறையாக நடப்பதற்கு வாய்ப்பு ஏதுமில்லை. எனவே, முறையாகவும் நேர்மையாகவும் வெளிப்படையான விசாரணை நடைபெறும் வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தர வேண்டும். இம்முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட உயர்பதவியில் உள்ளவர்கள் உட்பட அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட இடத்திலேயே அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருக்கிறது. அதில் ஊழல் நடக்காது என நேற்று வரை எல்லோரும் நம்பி இருந்தோம். ஆனால், அதில் இவ்வளவு பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால் குரூப் 1 தேர்விலும் முறைகேடுகள் நடந்து இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே முறைகேடு நடந்துள்ள தேர்வுகளை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கையில், “குரூப் 4 முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணையினால் உண்மைகள் வெளிவராது. டிஎன்பிஎஸ்சியைக் காப்பாற்றுகிற முயற்சியில்தான் தமிழக ஆட்சியாளர்கள் மறைமுகமாகச் செயல்படுவார்கள். இந்த முறைகேடுகள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த ‘தமிழகத்தின் வியாபம்’ என்று கருத வேண்டியிருக்கிறது. எனவே, அனைத்து முறைகேடுகள் குறித்தும் பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை மத்திய புலனாய்வுத்துறை மூலம் நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சியில் நேற்று (ஜனவரி 30) செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “டிஎன்பிஎஸ்சி மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளன. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்குத் தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஏதுவாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். முழுமையாக விசாரித்து, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் நீலமேகம் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், “சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால் சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும். மேலும், அந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் சிபிஐக்கு இந்த விசாரணை மாற்றப்படுமா என்பது தெரியவரும்.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »