Press "Enter" to skip to content

இரண்டாவது முறையாக மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு!4 நிமிட வாசிப்புபல்வேறு காரணங்களுக்காக கடந்த 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவ…

பல்வேறு காரணங்களுக்காக கடந்த 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. 26 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், இரண்டாவது முறையாக நேற்றும் பல இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் நடைபெறாத ஒரே மாவட்ட ஊராட்சியான சிவகங்கையில் நேற்று மீண்டும் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களிக்க வரவில்லை. இதன் காரணமாக சிவகங்கை மாவட்ட ஊராட்சிப் பதவிகளுக்கான தேர்தல் இரண்டாவது முறையாகத் தள்ளிவைக்கப்பட்டது.

இதுபோலவே தேனி மாவட்டம் கடமலை-மயிலை, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, சேலம் மாவட்டம் ஆலத்தூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இடங்களில் போதிய உறுப்பினர்களின் வருகையின்மை காரணமாகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் நிர்வாகக் காரணங்களுக்காகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாகச் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றிய தேர்தலில் 10 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திமுக உறுப்பினர்கள் 10 பேரும் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், பின்னர் எப்படி அதிமுக வெற்றிபெற முடியும் எனக் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி கனிமொழி தர்ணாவில் ஈடுபட்டார். இதனை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார். எனினும், அங்கு ஒன்றிய துணைத் தலைவர் தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஒத்தி வைக்கப்பட்ட 26 ஒன்றிய பெருந்தலைவர் பதவியிடங்களில் 14 இடங்களுக்கும், 41 ஒன்றிய துணைத் தலைவர் பதவியிடங்களில் 22 இடங்களுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. ஒன்றிய தலைவருக்கான தேர்தலில் அதிமுக – 7, திமுக – 4, பாமக – 2 இடங்களிலும், சுயேச்சை ஓர் இடத்திலும் வெற்றிபெற்றனர். ஒன்றிய துணைத்தலைவருக்கான தேர்தலில் அதிமுக – 5 இடங்களிலும், திமுக – 10, பாமக – 1, காங். – 1, மதிமுக – 1 இடங்களிலும் வெற்றிபெற்றன. சுயேச்சைகள் 4 இடங்களைக் கைப்பற்றினர்” என்று தெரிவித்துள்ளது.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »