Press "Enter" to skip to content

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசகர் ஆகிறார்- குமாரசாமி முடிவு

மதசார்பற்ற ஜனதா தளத்தை பழைய நிலைக்கு கொண்டு வர ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள தேர்தல் வியூக அறிஞர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் பெற முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி முடிவு செய்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டப்பேரவை மற்றும் எம்.பி. தேர்தல் மட்டுமல்லாது, உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்தோல்விகளை சந்தித்து வந்துள்ளதால் மதசார்பற்ற ஜனதா தளம் தொண்டர்களிடையே உற்சாகம் இல்லை.

கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவுக்கு வயதாகி விட்டதால், கட்சியை தனது கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருக்க முடியாமல் திணறி வருவதோடு சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்க முடியாமல் தவிக்கிறார்.

முன்னாள் முதல்-மந்திரியும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமி இதய நோயால் அவதிப்பட்டுள்ளதால், அவரால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்க முடியவில்லை. தேவகவுடா, குமாரசாமிக்கு பதிலாக கட்சியை பலப்படுத்தவும், மக்களை ஈர்க்கும் செல்வாக்கு இல்லாததாலும் மதசார்பற்ற ஜனதா தளவின் வாக்குவங்கி சுருங்கி வந்துள்ளது. இது இருவரையும் கவலையடைய செய்துள்ளது.

இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளத்தை பழைய நிலைக்கு கொண்டு வர ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள தேர்தல் வியூக அறிஞர் பிரசாந்த் கிஷோரை அணுக தேவகவுடா திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோரிடம் பேச்சுவார்த்தை நடத்த குமாரசாமியும் திட்டம் வகுத்துள்ளார்.

இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

பிரசாந்த் கிஷோரை சந்தித்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மறுமலர்ச்சிக்கு திட்டம் வகுக்க குமாரசாமி யோசித்துள்ளார்.

பீகார் மாநிலம் தவிர, பிற மாநிலங்களிலும் பிரசாந்த் கிஷோர் வகுத்த வியூகங்கள் தேர்தலில் வெற்றியை அளித்துள்ளன. அவரது வியூகங்களை கர்நாடகத்தில் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

மதசார்பற்ற ஜனதா தளம் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது குறித்து பிரசாந்த் கிஷோரிடம் இதுவரை குமாரசாமி பேசவில்லை. ஆனால், வெகுவிரைவில் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். குமாரசாமியை சந்திக்க பிரசாந்த் கிஷோரும், ஆர்வம் காட்டியுள்ளார். எனவே, இருவரும் வெகுவிரைவில் சந்திப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறியதாவது:-

மதசார்பற்ற ஜனதா தளத்தின் நலன் கருதி பிரசாந்த் கிஷோரின் உதவியை பெறுவதில் தவறில்லை. கட்சியை கட்டமைக்கவும், பலப்படுத்தவும் அவரது ஆலோசனைகள் பயன் அளிக்கலாம். அடிமட்டத்தில் இருந்து கட்சியைப் பலப்படுத்த ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம். வருகிற 10, 11-ந் தேதி தேசிய அளவில் மதசார்பற்ற ஜனதா தளம் மாநாடு நடக்கும்போது கட்சியின் பலம் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »