Press "Enter" to skip to content

தஞ்சை பெரியகோயிலில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தீர்ப்பு

மதுரை : தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசு உறுதியளித்தப்படி தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழாவை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் 

*தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்தக் கோரி நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்நாதன், ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன், கரூர் வக்கீல் தமிழ் ராஜேந்திரன், தமிழ்தேச பொதுவுடமை கட்சித்தலைவர் பெ.மணியரசன் ஆகியோர்,  சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனா்.

*அதில் தஞ்சை பெரியகோயிலில் 23 ஆண்டுகளுக்கு பின்னா் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. சைவ வழிபாட்டுத் தலங்களில் தமிழ்மறை அடிப்படையில்தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் சுந்தரா் கோயில் குடமுழுக்கு தொடா்பான வழக்கில், தமிழில் தமிழ்மறைகளை ஓதி குடமுழுக்கை நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.எனவே தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கையும் தமிழிலியே நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

*இதற்கிடையே சென்னையைச் சோ்ந்த ரமேஷ் பெரியகோயில் குடமுழுக்கை சம்ஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் எனவும், தமிழ்தேச பொதுவுடைமை கட்சி தலைவா் மணியரசன் தரப்பில் தமிழிலேயே குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்து அறநிலையத்துறை, மனுதாரர் தரப்பு வாதங்கள்

இந்த மனுக்களை நேற்று முன்தினம் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் விசாரித்தனர். தஞ்சை தேவஸ்தானம் மற்றும் அரசுத் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா பணிகள் சிவனடியார்கள் மூலம் நடக்கின்றன. யாகசாலை மற்றும் மகா அபிஷேகம் ஆகியவை தமிழில் மேற்கொள்ளப்படும். ஓதுவார்களும், குழந்தைகளும் திருமுறை பன்னிசை அகண்ட பாராயணம் வாசிப்பர். குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடக்கும். தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்’’ என வாதிடப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா முழுமையாக தமிழில் இருக்க வேண்டும். யாகசாலை மட்டுமின்றி கருவறைக்குள்ளும், கோபுரத்தில் குடமுழுக்கு நடத்தும் போதும் என அனைத்து நிலைகளிலும் தமிழ் இடம் பெற வேண்டும். கருவறைக்குள் தமிழை மறுப்பது சட்டவிரோதம்’’ என வாதிடப்பட்டது. இதே போல், சமஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

2 மொழிகளிலும் குடமுழுக்கை நடத்தலாம் என தீர்ப்பு

இந்நிலையில், இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘தமிழக அரசும், தேவஸ்தானமும் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளபடி தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும். மேலும் பிரமாண பத்திரத்தில் உறுதியளித்தப்படி குடமுழுக்கு விழாவை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை, 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, இது தொடர்பான மனுக்கள் அனைத்தயைும் தள்ளுபடி செய்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »