Press "Enter" to skip to content

சிஏஏ வரலாற்றுச் சிறப்புமிக்கது: ஜனாதிபதிக்கு எம்.பி.க்கள் …4 நிமிட வாசிப்புகுடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் காந்தியின் விருப்பம் நிறைவேறியதாக…

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் காந்தியின் விருப்பம் நிறைவேறியதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 31) காலை 11 மணிக்குத் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். நிகழ்வில் கையில் கறுப்பு பட்டை அணிந்தபடி, காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர், “இந்த தசாப்தத்தின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இது. இந்தியாவின் வளர்ச்சியில் இந்த பத்தாண்டுகள் மிகவும் முக்கியமானது. காந்தி மற்றும் நேரு ஆகியோரின் கனவுகளை இந்த தசாப்தம் நனவாக்கும். கடந்த 7 மாதங்களில் நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. முஸ்லீம் பெண்களுக்கு சம அதிகாரம் வழங்கும் முத்தலாக் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 370, 35 ஏ ஆகிய பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டது வரலாற்று ரீதியானது மட்டுமல்லாமல், அது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் சம வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.

அயோத்தி வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு நாட்டு மக்கள் நடந்துகொண்டு விதம், அவர்களின் முதிர்ச்சி பாராட்டத்தக்கது என குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். தேசிய நலன்களை முன்வைத்து மக்களுக்குத் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், “பரஸ்பர கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள்தான் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்தும் என்பது அரசாங்கத்தின் கருத்து. அதே நேரத்தில் போராட்டம் என்கிற பெயரில் நடைபெறும் எந்தவொரு வன்முறையும் சமூகத்தையும் நாட்டையும் பலவீனப்படுத்தும்” என்று குறிப்பிட்டுவிட்டு, “நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சட்டம்” என்று பேச, அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ச்சியாக தனது உரையில் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்ற திருக்குறளை மேற்கொள் காட்டி விவசாயிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.

முன்னதாக சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »