Press "Enter" to skip to content

மதுரை நெருக்கடிக்கு தீர்வு காண திருமங்கலம் முதல் மேலூர் வரை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) கனவு திட்டம் நனவாகுமா?

மதுரை: மதுரை நெருக்கடிக்கு தீர்வு காண திருமங்கலம் முதல் மேலூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் வருமா? என ஓரிரு மாதங்களில் தாக்கலாகும் தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புராதன சிறப்பு மிகுந்த மதுரை மாநகருக்குள் 148 சதுர கி.மீ. பரப்பளவில் சுமார் 20 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். மாநகர் எல்கை தாண்டி திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை புதுக்கோட்டை வரை குடியிருப்புகள் விரிவடைந்துள்ளன. பன்னாட்டு விமான நிலையம், ஐகோர்ட் கிளை, ஐ.டி.பூங்கா அமைந்துள்ளதால் நகரம் வளர்ந்து கொண்டே போகிறது. இன்னொரு பக்கம் வாகனங்கள் புற்றீசலாக பெருகுகிறது. இதன் விளைவு மதுரை நகருக்குள் நெருக்கடி எகிறுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் நெருக்கடியை தாங்க முடியாத நிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு தீர்வாக சென்னையைப்போல் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என 2012ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. 8 ஆண்டுகளாகியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எப்போது நிறைவேறும்? என்ற கேள்வி ரயில் போல் நீண்டு கொண்டே போகிறது.

மதுரையில் மெட்ரோ ரயில் பாதை திருமங்கலத்தில் தொடங்கி, எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ரயில் நிலையம், யானைக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட்,  ஐகோர்ட் கிளை வழியாக மேலூர் வரை அமைக்க வாய்ப்புள்ளதாக பொறியியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். தற்போதுள்ள அகன்ற வீதிகளில் மேம்பாலம் கட்டி அதன் மேல்தளத்திலும், தேவையான இடங்களில் சுரங்கபாதையிலும் தண்டவாளம் அமைத்து மெட்ரோ ரயில் இயக்க முடியும். இதனை போக்குவரத்து வல்லுனர்கள் யோசனையாக அரசுக்கு அளித்துள்ளனர்.

போக்குவரத்து ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மதுரைக்கு தொழில், வர்த்தகம், வேலை வாய்ப்புக்காக வெளியூர் மக்கள் தினமும் 4 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்.  மாநகரில் தற்போதுள்ள வீதிகளை விஸ்தரிக்க வாய்ப்பில்லை. முக்கிய வீதிகள் அனைத்தும் ஒருவழி பாதையாகி விட்டன. ஆனாலும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி திணறுகின்றன. இதிலிருந்து மீள மெட்ரோ ரயில் அவசியமாகிறது. மதுரை ‘‘ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் கனவு கலைந்து விடாமல் நிஜமாக வேண்டும். பிப்ரவரி அல்லது மார்ச்சில் தாக்கலாகும் தமிழக அரசின் பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்பு வெளியாகுமா? என்பதே மதுரை மக்களின் கனவாக நீடிக்கிறது. இவ்வாறு தெரிவித்தனர்.

பாக்ஸ்: உசிலம்பட்டி வரை ரயில்

மதுரை போடி ரயில் பாதையில் உசிலம்பட்டி வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. எனவே இந்த பாதையில் உசிலம்பட்டி வரை பயணிகள் ரயில் இயக்க வாய்ப்பு கனிந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பிப்ரவரியில் தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் வெளியாகும்? என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு கூடல்நகரில் முடங்கி கிடக்கும் ரயில் நிலையமும் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »