Press "Enter" to skip to content

ஒரு துப்பாக்கி வாங்க தேவையான ஆவணங்களை காட்டிலும், ஒரு ரெஸ்ட்ராண்ட் திறக்க அதிக ஆவணங்கள் வேண்டும்…

சொல்லும் பொருளாதார ஆய்வறிக்கை தலைநகர் டெல்லியில் ஒரு துப்பாக்கி வாங்குவதற்கு உரிமம் பெற தேவையான ஆவணங்களை காட்டிலும் ஒரு ஹோட்டல் திறக்க அதிக ஆவணங்கள் தேவைப்படுவதாக 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வழக்கமான வணிகங்களுக்கு கூட சேவை துறை பல்வேறு விதிமுறை தடைகளை எதிர்கொள்கிறது. 

உலகெங்கும் பார்கள் மற்றும் ரெஸ்ட்ராண்ட்கள் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியின் ஆதாரமாக விளங்குகின்றன. இந்தியாவில் இந்த தொழில்களை தொடங்குவதற்கே பல்வேறு தடைகள் உள்ளன என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ரெஸ்ட்ராண்ட் தொடங்க அதிக உரிமங்கள் தேவை. அதேசமயம் சீனா மற்றும் சிங்கப்பூரில் ரெஸ்ட்ராண்ட் தொடங்க 4 உரிமங்கள் மட்டுமே போதும். இந்திய தேசிய ரெஸ்ட்ராண்ட்ஸ் சங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி, பெங்களூருவில் ரெஸ்ட்ராண்ட் தொடங்க வேண்டுமானால் 36 அனுமதிகள் தேவை, டெல்லி மற்றும் மும்பையில் என்றால் முறையே 26 மற்றும் 22 ஒப்புதல்கள் தேவை.

மேலும்,  டெல்லி மற்றும் கொல்கத்தால் இந்த ஒப்புதல்களோடு போலீஸ் ஈடிங் ஹவுஸ் உரிமம் பெற வேண்டும். டெல்லியில் காவல்துறையிடம் இந்த உரிமம் பெற 45 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அதேசமயம் புதிய ஆயுதங்கள் அல்லது முக்கிய வெடிகள் வாங்குவதற்கான உரிமம் பெற முறையே 19 மற்றும் 12 ஆவணங்கள் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »