Press "Enter" to skip to content

புத்துணர்வு முகாம் நிறைவுபெற்றது: பிரிய மனமின்றி விடைபெற்ற கோயில் யானைகள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே 48 நாட்கள் நடந்த கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு பெற்றது. தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் 12வது ஆண்டாக மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் கடந்த டிசம்பர் 15ம் தேதி துவங்கியது. முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மொத்தம் 28 கோயில் யானைகள் பங்கேற்றன. இந்த யானைகளுக்கு நாள்தோறும், சத்தான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. யானைகளின் புத்துணர்ச்சிக்காக காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி அளிக்கப்பட்டது. ஷவர் குளியல் போட்ட யானைகளுக்கு பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டன. இதனால், முகாமில் பங்கேற்ற யானைகள் குதூகலமாக இருந்தன.

அனைத்து யானைகளுக்கும் ‘’ஹெல்த் கார்டு’’ வழங்கப்பட்டு, யானைகளின் உடல்நிலை குறித்து கால்நடை மருத்துவர்கள் அவ்வப்போது ஆய்வு செய்தனர். யானைகளின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. பல்வேறு வகைகளில் காயம் அடைந்து புண்களுடன் இருந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமை, கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளி மாநிலங்களை சேர்ந்த மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கடந்த 48 நாட்களாக நடந்து வந்த இந்த யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது. பிரியாவிடை பெறுவதற்காக யானைகள் அனைத்தும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தன. யானைகளின் நெற்றியில் பட்டையும், அலங்கார ஆடைகளும் அணிவிக்கப்பட்டு இருந்தன. இதனால் யானைகள் அனைத்தும் கம்பீரமாக போஸ் கொடுத்தன.

இவற்றுக்கு அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கரும்பு மற்றும் பழ வகைகள் வழங்கினர். பேரூர் கோயில் யானை கல்யாணி, ராமேஸ்வரம் ராஜலட்சுமி, மயிலாடுதுறை அபயாம்பிகை யானைகள் தங்களது தும்பிக்கைகளை ஒன்றோெடான்று பிணைத்து பிரிய நேரிடும் சோகத்தை பகிர்ந்து கொண்டு, பிரிய மனமின்றி விடைபெற்றன. இதனைக்கண்ட பார்வையாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். தொடந்து, யானைகள் ஒவ்வொன்றாக லாரிகளில் ஏற்றப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முகாம் குறித்து, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன்  கூறுகையில், ‘’யானைகள் நல்வாழ்வு முகாம் இனிதே நடந்து முடிந்தது.

யானைகள் புத்துணர்வுடன் திரும்பிச்சென்றன. யானைகளுக்கு, இந்த முகாமில் பல கட்ட  சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பாகன்கள் உடல் நலம் காக்கவும் மருத்துவ  முகாம்கள் நடத்தப்பட்டன’’ என்றார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன் கூறுகையில், ‘’வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு வரும்  பிப்ரவரி 6ம் தேதி இதேபோல் புத்துணர்வு முகாம் நடத்தப்படும்” என்றார். ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர்கள் மங்கையர்கரசி (தலைமையிடம்), ராஜமாணிக்கம் (கோவை) உள்பட பலர் செய்திருந்தனர்.

ரூ.1.5 கோடி செலவு
யானைகள் புத்துணர்வு முகாமிற்கு,  தமிழக அரசு ரூ1.5 கோடி ஒதுக்கீடு செய்தது. மொத்தம் 6  ஏக்கர் நிலம் சுத்தம் செய்யப்பட்டு முகாம் அமைக்கப்பட்டது. நிர்வாக  அலுவலகம், பாகன்கள் தங்கும் இடம், ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம்,  பாகன்கள் மற்றும் யானைகளுக்கான கொட்டகை, யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள தனி  நடைபாதை, குளியல் மேடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இந்த முகாமுக்குள்  காட்டு யானைகள் நுழைந்துவிடும் என்பதால் காட்டு யானைகளின் நடமாட்டத்தை  கண்காணிக்க முகாமை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.  வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அடம்பிடித்த யானைகள்
புத்துணர்வு முகாம் நடந்து முடிந்து யானைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக லாரியில் ஏற்றப்பட்டன. அப்போது பெரும்பாலான யானைகள் லாரியில் ஏற மறுத்து அடம்பிடித்தன. பாகன்கள் யானைகளை சமாதானம் செய்து லாரியில் ஏற வைத்தனர். இது குறித்து பாகன்கள் கூறுகையில், ‘’லாரிகளை கண்டதும் யானைகள் ஏற மறுத்து அடம்பிடித்தன. நண்பர்களை பிரிந்து செல்ல யானைகளுக்கு மனம் வரவில்லை. அவைகளை சமாதானம் செய்து ஒரு வழியாக லாரியில் ஏற்றியுள்ளோம்’’ என்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »