Press "Enter" to skip to content

அறந்தாங்கி நகராட்சியின் அவலம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தஞ்சமடையும் மாடுகள்… நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

அறந்தாங்கி: அறந்தாங்கி நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததால், அந்த மாடுகள் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தஞ்சமடைவதால், அங்கு வரும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அறந்தாங்கி நகரில் மாடு வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் மாடுகளை வீடுகளில் கட்டி,தீவனம் போட்டு வளர்க்காமல் சாலைகளில் அவிழ்த்து விடுகின்றனர். இவ்வாறு விடப்படும் மாடுகள் சாலை ஓரங்களில் கிடக்கும் இலைகள், பேப்பர், போஸ்டர் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. பின்னர் அந்த மாடுகள் பகல் நேரத்தில் கூட சாலைகளில் படுத்து உறங்குகின்றன. மாடுகள் சாலைகளில் படுத்துகிடப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மாடுகள் மீது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மோதி, கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது.

இவ்வாறு நகர் முழுதும் சுற்றித் திரியும் மாடுகள் தற்போது காவல்துறை வளாகம், பழைய தாலுகா அலுவலக வளாகம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அலுவலக வளாகங்களுக்கு கூட்டம் கூட்டமாக வந்து ஓய்வு எடுக்கின்றன. இதனால் இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தினசரி நுhற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்லும் நிலையில் தினசரி 10க்கும் மேற்பட்ட மாடுகள் இந்த வளாகத்தில் உள்ள மரத்தடியில் படுத்து ஓய்வு எடுப்பதால்,அங்கு வருபவர்கள் அங்குள்ள மரத்தடி நிழலில் வெயிலுக்கு ஒதுங்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அறந்தாங்கி நகரில் மாடுகளை வளர்ப்பவர்கள், அந்த மாடுகளை வீடுகளில் கட்டி வளர்க்காமல் சாலைகளில் அவிழ்த்து விடுகின்றனர்.

இதனால் மாடுகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நிகழ்கின்றன. இந்த நிலையில் தற்போது சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கூட்டம் கூட்டமாக சென்று ஓய்வு எடுக்கின்றன. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும் ஒரு சில நேரங்களில் மாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும்போது, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி விடுகின்றன. அறந்தாங்கி நகரில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகம் சிறைபிடித்து அபாரதம் விதித்ததால், சில மாதங்கள் மாடு வளர்ப்போம் தங்கள் மாடுகளை வீடுகளில் கட்டி வளர்த்தனர்.

ஆனால் தற்போது அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் நகரில் சுற்றித் திரியும் மாடுகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாடுகள் சுதந்திரமாக வலம் வருகின்றன என்றனர்.அறந்தாங்கி நகராட்சியின் மெத்தனப் போக்கால், அறந்தாங்கி நகரில் சுற்றித் திரியும் மாடுகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தஞ்சம் புகுவதால், அங்கு பணியாற்றுவோர், பொதுமக்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நகரில் மாடுகள் சுற்றி திரியாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »