Press "Enter" to skip to content

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மதுரையில் ரூ.200 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு

மதுரை:  12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது. இதனால், மதுரையில் நேற்று ரூ.200 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், ஜன.31 மற்றும் பிப்.1 ஆகிய இருநாட்கள்   வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதனடிப்படையில், நேற்று வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதையொட்டி நேற்று காலை மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல அலுவலகம் முன்பாக திரண்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சுந்தர்ராஜன், ஸ்ரீதர், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளன நிர்வாகி செந்தில் ரமேஷ், தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகி வரதன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி ஜோசப் சகாய செல்வன், இந்திய வங்கி ஊழியர் சங்கம் நிர்வாகி சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து  கொண்டனர். வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மதுரையில் ரூ.200 கோடி அளவிற்கு பண பரிவர்த்தனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 2 நாள் வேலை நிறுத்தம் காரணமாக மாத இறுதியில் ஊதியம் பெற கூடிய அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுதவிர ஏடிஎம் மையங்களிலும் பணம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.  இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தராஜன் கூறும்போது, “வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை.

இதனால், இன்று (நேற்று) வேலை நிறுத்த போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த போராட்டத்தில், மாநகர் அளவில் 5 ஆயிரம் பேரும், மாவட்ட அளவில் 10 ஆயிரம் பேரும் கலந்துகொண்டுள்ளனர். கூட்டுறவு வங்கிகள் தவிர்த்து, 27  பொதுத்துறை வங்கிகள், 7 தனியார் வங்கிகள்  மூடப்பட்டுள்ளன. வங்கி வேலை நிறுத்தத்தால், பணப்  பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், மார்ச் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை 3 நாட்கள் ெதாடர் வேலைநிறுத்தம் செய்வது மற்றும் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தீவிரப்படுத்துவது என முடிவெடுத்துள்ளோம்’ என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »