Press "Enter" to skip to content

110 அரங்குகள் அமைக்கப்படுகிறது நெல்லை புத்தக திருவிழா இன்று கோலாகல தொடக்கம்: பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்பு, கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு

நெல்லை: நெல்லை புத்தக திருவிழா பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்படுகிறது. பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர். கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு  மையம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்  ஆகியவை இணைந்து பொதுமக்களின் வாசிப்பு திறன் மற்றும் அறிவுசார் சிந்தனையை  ஊக்குவிக்கும் வகையில் நெல்லை புத்தக திருவிழா பிப்.1 முதல் 10ம் தேதி வரை  10 நாட்கள் நடத்தப்படுகிறது. பாளை. வஉசி மைதானத்தில் நடக்கும் இந்த  புத்தக திருவிழாவை பிரபலப்படுத்த கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாளை. வஉசி மைதானத்தில் ஊர் கூடி ஓவியம் வரையும் போட்டி, நெல்லை டவுன் கல்லணை பள்ளியில் புத்தகம் வாசித்தல், விழிப்புணர்வு பேரணி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புத்தக திருவிழாவிற்காக பாளை. வஉசி மைதானத்தில் கடந்த 27ம் தேதி முதல் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தகர கூரை பந்தல் அமைக்கப்பட்டு 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு பதிப்பாளர்களின் புத்தக அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
புத்தக திருவிழா தொடக்க விழா இன்று (1ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகிக்கிறார். எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், வைகோ, ஞானதிரவியம், தனுஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் வரவேற்கிறார். அமைச்சர் ராஜலெட்சுமி புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேசுகிறார். விழாவில் எம்எல்ஏக்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், பூங்கோதை ஆலடி அருணா, டிபிஎம் ைமதீன்கான், ஏஎல்எஸ் லெட்சுமணன், அபுபக்கர் ஆகியோர் பேசுகின்றனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம் நன்றி கூறுகிறார். இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைப்போட்டிகள், 12 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், பிற்பகல் 2 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைப் போட்டிகள், 3.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 4.30 மணிக்கு கலை பண்பாட்டு துறையின் நாட்டுப்புற நடனம், 5 மணிக்கு நூல் வெளியீடு ஆகியவை நடக்கிறது. பின்னர் நடக்கும் நிகழ்ச்சிக்கு நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தலைமை வகிக்கிறார். மாவட்ட நூலக அலுவலர் வயலட் முன்னிலை வகிக்கிறார். கவிஞர் கிருஷி வரவேற்கிறார். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோடி குரூஸ் கௌரவிக்கப்படுகிறார். பேராசிரியர் தர்மராஜ், மக்கள் சிந்தனை பேரவை ஸ்டாலின் குணசேகரன், எழுத்தாளர் நெல்லை கவிநேசன், கவிஞர் தேன்மொழி ஆகியோர் பேசுகின்றனர்.

கட்டளை கைலாசம் நன்றி கூறுகிறார். இரவு 8 மணிக்கு உள்ளம் தொடும் உறவுகள் என்ற தலைப்பில் கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம் நடக்கிறது.
புத்தக திருவிழா பிப்.10 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். ஏற்பாடுகளை உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள்
செய்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »