Press "Enter" to skip to content

அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் சின்னதடாகமாக மாறும் புதுப்பதி, சின்னாம்பதி

கோவை : கோவை வாளையாறு அடுத்த புதுப்பதி, சின்னாம்பதியில் அனுமதியின்றி செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையாறு அடுத்த மதுக்கரை வனச்சரகத்திற்குட்ட பகுதியில் அமைந்துள்ளது புதுப்பதி, சின்னாம்பதி ஊர்கள். இந்த பகுதியில் சுமார் 140 குடியிருப்புகள் உள்ளது. இந்த ஊர் வனப்பகுதிக்குள் இருப்பதால் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இதனால், ஊருக்கு செல்வதற்கு முன்பு வனத்துறையின் சோதனைச்சாவடியை கடந்து செல்ல வேண்டும். ஊருக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் வகையில் அகழிகள், வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்துள்ள ரயில் பாதையில்தான் அடிக்கடி யானைகள் அடிபட்டு இறந்து வந்தது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதியில் இருப்பதால் புதுப்பதி, சின்னாம்பதி பகுதியை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. இதனை பயன்படுத்தி புதுப்பதி, சின்னாம்பதியில் முறைகேடாக  செங்கல்சூளைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த செங்கல் சூளைகளில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். மேலும், வனப்பகுதியில் இருந்து டன் கணக்கில் செங்கல் சூளைக்காக மண் எடுக்கின்றனர்.  இதனால், அப்பகுதியில் பெரிய  அளவிலான பள்ளங்களை காண முடிகிறது. இப்பகுதி யானை வலசை பாதையாகும். வனப்பகுதியில் இருந்து மண் எடுக்கப்பட்டு வருவதால் யானைகளின் வழித்தடம் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், யானைகள் ஊருக்குள் நுழைகின்றன. செங்கல் சூளைகளில் யானைகள் நுழையாமல் இருக்க மின்சார வேலியும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், வனத்தில் மண் எடுப்பதை தடுக்கவும், முறைகேடாக செங்கல் சூளைகள் நடந்து வருவது தொடர்பாகவும் வனத்துறையினர் வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், அதிகாரிகளுக்கு செங்கல் சூளை அதிபர்கள் தேவையான அனைத்தும் அளித்து வருகின்றனர். இதனால்,  அதிகாரிகள் முறைகேடாக இயங்கி வரும் செங்கல் சூளைகளை  கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த செங்கல் சூளைகளில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான செங்கல் கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் கனிமவளம் கொள்ளையடிக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு அளிக்கப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கோவை சின்ன தடாகம் பகுதியைபோல் புதுப்பதி மற்றும் சின்னாம்பதியும் மாறி வருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முறைகேடாக அனுமதியின்றி நடத்தப்பட்டு வரும் செங்கல் சூளை விவகாரம் குறித்து கனிமவளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்க முயற்சி செய்த போது, அவர்கள் தொடர்ந்து பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தனர்.

ஆனால், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், புதுப்பதி, சின்னாம்பதி பகுதியில் செங்கல் சூளை நடந்து வருகிறதா? என ஆச்சரியமாக கேட்டனர். இது தொடர்பாக ஆய்வு செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: புதுப்பதி, சின்னாம்பதியில் அனுமதியின்றி செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து கேரளாவிற்கு செங்கல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் பல அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டப்பட்டு மண் எடுத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் சின்னதடாகம் போன்று புதுப்பதி, சின்னாம்பதியிலும் செங்கல் சூளையின் நகரமாக மாறும் அபாயம் உள்ளது.

சமீபத்தில் சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை பகுதியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 141 செங்கல் சூளைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட செங்கல் சூளைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் புதுப்பதி, சின்னாம்பதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். முறைகேடாக செயல்படும் செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »