Press "Enter" to skip to content

தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம் நிறைவு பெற்றது தென் மாவட்ட 8 யானைகள் இன்று திரும்பின: நெல்லையில் `காந்திமதிக்கு’ உற்சாக வரவேற்பு

நெல்லை: ஆண்டு தோறும் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் யானைகள் நலவாழ்வுக்கான புத்துணர்வு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தாண்டிற்கான புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி துவங்கியது. இதில் தமிழகம், புதுவையை சேர்ந்த கோயில்கள் மற்றும் மடங்களின் 28 யானைகள் பங்கேற்றன.இதேபோல் நெல்லையப்பர் கோயிலின் காந்திமதி யானை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி யானை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயில் தெய்வானை யானை, ஆழ்வார்திருநகரி கோயில் லட்சுமி, குமுதவள்ளி உள்ளிட்ட 8 யானைகள் இம்முகாமில் பங்கேற்றன.முகாமில் யானைகளுக்கு மூலிகை உணவு, ஷவர் குளியல், நடைபயிற்சி, மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
இதனால் யானைகள் உற்சாகமாக முகாமில் இருந்தன. முகாம் வாயிலாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் யானைகள் பக்குவப்பட்டுள்ளதாக கால்நடை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் புத்துணர்வு சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று இரவே லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த கோயில்களுக்கு மீண்டும் திரும்ப அழைத்துவரப்பட்டன.

அந்த வகையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 8 யானைகளும் நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை ஊர்வந்து சேர்ந்தன. யானைகள் வந்தவுடன் சிறப்பு கஜபூஜைகள் நடத்தப்பட்டன. நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி இன்று காலை நெல்லை சந்திப்பு மதிதா இந்து மேல்நிலைப்பள்ளிக்கு வந்தது. அங்குள்ள மேடையில் யானை லாரியில் இருந்து இறக்கப்பட்டது. பின்னர் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கு காந்திமதியானைக்கு சிறப்பு கஜபூஜை செய்யப்பட்டது. யானையுடன் கோயில் நிர்வாக அலுவலர் யக்ஞ நாராயணன், பேஸ்கார் மற்றும் பாகன்கள் உடன் வந்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »