Press "Enter" to skip to content

3 மாதமாக அரிசி வழங்காத ஞாயவிலைக்கடை விற்பனையாளரை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள்: விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள வி.குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கோ.ஆதனூர் கிராமத்தில் நியாயவிலை கடை இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் பொதுமக்களுக்கு அரசு சலுகை விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவைகள் குடும்ப அட்டையின் கணக்கின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் விற்பனையாளராக ராஜேந்திரன் என்பவர் இருந்து வருகிறார்.கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய் வழங்கப்படாமல் பணத்தை பெற்றுக்கொண்டு டோக்கன் மட்டும் வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அரிசி வழங்கப்படும் என அறிவித்ததன் பேரில் பொதுமக்கள் குடும்ப அட்டையுடன் பணம் மற்றும் பைகளை கொண்டு வந்து நியாய விலை கடையில் காத்திருந்தனர். அப்போது கடந்த மாதங்களை போலவே அரிசி, மண்ணெண்ணெய் வழங்காமல் டோக்கன் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் விற்பனையாளரிடம் கேட்டபோது, அலட்சியமான பதிலை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் விற்பனையாளர் ராஜேந்திரனை கடைக்கு உள்ளே வைத்து வெளியில் பூட்டு போட்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து வந்த குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பழனிவேல் அவர்களை சமாதானம் செய்தார். ஆனால் பொதுமக்கள், நீங்களும் சேர்ந்து தான் மக்களுக்கு தர வேண்டிய, அரிசி, மண்ணெண்ணெய், கோதுமைகளை பதுக்கி வைத்து வெளிசந்தையில் விற்று வருகிறீர்கள் எனக்கூறி ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரம் விற்பனையாளரை உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த கம்மாபுரம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அப்போது, நியாயவிலைக் கடை அரிசியை வெளிசந்தையில் விற்று கொள்ளையடிக்க விற்பனையாளர், செயலாளர் ஆகியோர் திட்டம் தீட்டி வருகின்றனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் எத்தனை முறை புகார் அளித்தாலும் கண்டுகொள்வது கிடையாது. கடந்த மூன்று மாதங்களாக டோக்கன் மட்டும் வழங்கிவிட்டு செல்கிறார். ஆனால் எங்களுக்கும் அரிசி, மண்ணெண்ணெய் வாங்கியது போல் செல்போனில் குறுந்தகவல் வருகிறது. இதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி ஆவேசமாக கூறினர்.சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந் சென்றனர். இதன் பின்னர் பூட்டை திறந்து விற்பனையாளர் வெளியே அழைத்து வரப்பட்டார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »