Press "Enter" to skip to content

இருட்டறையில் கருப்புப் பூனையாக உள்ளது…. வரவு செலவுத் திட்டத்தை வரிவரியாக கண்டிக்கும் மு.க. ஸ்டாலின்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் வீண் முயற்சியாகவே இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய பாஜக அரசின் 2020-21ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ‘பொருளாதார தேக்க நிலை’,  ‘கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி’, ‘கிராமப்புற மக்களின் வருவாய்’, ‘வேலைவாய்ப்பின்மை’ உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல், பாஜக விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
 ‘மக்களுக்குப் பணியாற்ற எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம்’, ‘ஒவ்வொரு குடிமகனின் வாழ்வையும் எளிதாக்குவோம்’ போன்ற பட்ஜெட் வாசகங்களுக்கான ‘அர்த்தமுள்ள திட்டங்கள்’ எதையும் காண முடியவில்லை. மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை; திட்டங்களும் கிடைக்கவில்லை! ‘ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி’ தவிர வேறு எந்த ஒரு உருப்படியான அறிவிப்பும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை.
நிதி நிலை அறிக்கையின் கவர்ச்சி வாசகங்கள் ஏழை- நடுத்தர மக்களுக்கானது அல்ல! நிதி நிலை அறிக்கை முழுவதும் “கார்ப்பரேட்”களின் மீதான அக்கறையை நேரடி ஒலிபரப்பு செய்திருக்கிறது. விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் வருமானத்தை பெருக்கிடவும், வேலை வாய்ப்புகள் இழப்பு ஏற்படாமல் தடுத்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், எவ்வித ஆக்கபூர்வமான திட்டங்களும் இல்லை. வருமான வரி விதிப்பு அனைத்தும் சமூகப் பாதுகாப்பை தகர்க்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

 
கல்விக்கு நிதியைக் குறைத்து, மாணவர்கள்- குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வியைப் பாழ்படுத்தும் வகையிலும், சமூக நீதிக் கொள்கையின் கட்டுமானத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் பாஜக அரசு தொடர்ந்து நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துவருகிறது. வேகமாக நகர்மயமாகி வரும் இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு, உட்கட்டமைப்பு நிதி ஒதுக்கவில்லை. தமிழக ரயில்வே திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதற்கு பதிலாக  ‘மாவட்ட மருத்துவமனைகள் தனியார்மயம்’, ‘எல்.ஐ.சி தனியார் மயம்’ போன்றவை இந்த அரசுக்கு தொலைநோக்கு பார்வையும் இல்லை; தொலைந்துபோன பொருளாதாரத்தை மீட்க வேறு வழியும் தெரியவில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.


 ‘எங்கும் எதிலும் இந்துத்துவா திணிப்பு’ என்பதில் தீவிரம் காட்டி வரும் பாஜக அரசு, இந்த நிதிநிலை அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகத்தை “சரஸ்வதி சிந்து நாகரிகம்” என்று பெயர் சூட்டி- கீழடியில் கிடைத்த தமிழர் நாகரீகம் உள்ளிட்ட பல ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றைத் திருத்தவும் திரிக்கவும் முயலுவதை தமிழகம் சிறிதும் பொறுத்துக் கொள்ளாது. தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எவ்விதப் பயனும் அளிக்காத, பலனும் இல்லாத நிதி நிலை அறிக்கை! ஒட்டுமொத்தமாகவே, மாநிலங்களுக்கு நிதிகள், திட்டங்கள் என எவற்றையும் போதிய அளவு ஒதுக்காமல், அவற்றை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய அரசின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் பட்ஜெட்டாகவே இது இருக்கிறது!
வேலைவாய்ப்பாற்ற இளைஞர்கள், சிறு குறு தொழில் செய்வோர், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிற்கும் ஏமாற்றம் அளித்து விரக்தியை ஏற்படுத்தும் நிதி நிலை அறிக்கை! நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்டாக இருக்கிறது!  இந்தியாவுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட்டாக இல்லாமல் ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக இருக்கிறது!
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் வீண் முயற்சியாகவே இருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை. ஏற்கனவே “ மதச்சார்பின்மை“ என்ற கருத்தாக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்திய பா.ஜ.க அரசு, இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் “சோஷலிசம்” என்ற கருத்தாக்கத்திற்கும் ஆபத்தை நிச்சயப்படுத்தியிருக்கிறது. ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டியிருக்கும் நிதி அமைச்சர், “சித்திரம் பேசேல்” (அதாவது உண்மை அல்லாததை மெய்யானது போலப் பேசாதே) என்ற ஆத்திச் சூடியையும் நிச்சயம் படித்திருப்பார். தமிழ், சமஸ்கிருதம், உருது மொழிகளின் இலக்கியங்களிலிருந்து, திட்டமிட்டு மேற்கோள்களைக் கையாண்டு, நாட்டைத் திசை திருப்பிவிட முடியாது.
கிராமப்புறப் பொருளாதாரத்தை – வளர்ச்சியை- ஏன் தமிழகத்தை அடியோடு புறக்கணித்து – சமூக நீதிக்கு எதிரான “புதிய கல்விக் கொள்கையை விரைந்து செயல்படுத்துவோம்” என்ற அறிவிப்புடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதி நிலை அறிக்கைக்கு, திமுக சார்பில் மன நிறைவின்மையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »