Press "Enter" to skip to content

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்டுவிட்ட நிர்மலா சீதாராமனின் மத்திய வரவு செலவுத் திட்டம்: ப.சிதம்பரம்

டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் கைவிட்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் ப. சிதம்பரம் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதியின் உரையில் தற்போதைய பொருளாதார பாதிப்பை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற அம்சம் எதுவும் இடம்பெறவில்லை. பொருளாதார அறிக்கையில் கட்டமைப்பு சீர்திருத்தங்க்கள் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் இதை அப்படியே புறக்கணித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இலக்கு எதுவும் தெளிவானதாகவும் இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி 12% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 2019-20-ல் 8.5% ஆக மட்டும் இருந்தது. தற்போது 2020-21- ல் 10% ஆக இது கணிக்கப்பட்டுள்ளது.

வரிகள் மூலமான வருவாய் ரூ16,49,582 கோடியாக ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் மத்திய அரசால் நடப்பாண்டின் மார்ச் மாதத்துக்கு முன்புவரை ரூ15,04,587 கோடி மட்டுமே வருவாய் பெற முடியும். பங்குகள் விலக்கல் மூலம் ரூ1,05,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நடப்பு நிதியாண்டில் ரூ65,000 கோடிதான் கிடைத்திருக்கிறது.

2019-20-ம் ஆண்டில் மொத்த செலவினம் ரூ27,86,349 கோடி என மதிப்பிடப்பட்டது. ஆனால் அரசால் ரூ26,98,552 கோடிதான் செலவிடப்பட்டது. இத்தனைக்கும் ரூ63,086 கோடி கடன் பெறப்பட்டும் உள்ளது.

imageசென்னையில் தங்கம் விலை கிடு கிடு உயர்வு.. ஒரே நாளில் 312 ரூபாய் அதிகரிப்பு.. இன்னும் அதிகரிக்குமாம்!

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த ஆலோசனைகளைப் பற்றி மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசின் போக்கில் மாற்றம் இருக்கிறதா? என்றால் அப்படி எதுவும் இல்லை என்பதுதான் பதில். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கல்கள் குறித்த அரசின் பார்வை என்ன என்பதை பற்றி நிதி அமைச்சர் தமது பட்ஜெட் உரையில் தெரிவிக்கவில்லை.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சீர்திருத்தங்கள் என்பது வரி செலுத்துவோருக்கு வரி விலக்குகள் அளிப்பது என்பது மட்டுமாக இருக்கிறது. பட்ஜெட்டுக்கு முன்னரே ரூ40,000 கோடி அளவுக்கு காப்பரேட் செக்டாருக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஜி.எஸ்.டியை அறிமுகப்படுத்தியபோது மத்திய அரசு என்ன மாதிரியான தவறுகளை செய்ததோ அதையே வரி விலக்கு, விலக்கு ரத்து மற்று பல்வேறு படிநிலைகளிலான தனிநபர் வருமான வரி கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் மீண்டும் செய்திருக்கிறது.

பொதுவாக பட்ஜெட்டானது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, வளர்ச்சியை உருவாக்குவது, தனியார் முதலீடுகளை மேம்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட அம்சங்களை கைவிட்டிருக்கிறது.

இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »