Press "Enter" to skip to content

ஆம்பூர் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுவது எப்போது?…ரெட்டி தோப்பு தொடர்வண்டித் துறை மேம்பாலப்பணிகள் கிணற்றில் போட்ட கல்லாச்சு: தொடர்வண்டித் துறை, வனத்துறை அனுமதிக்காக 4 ஆண்டுகளாக காத்திருப்பு

ஆம்பூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், தற்போது உதயமாகி உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்குவது ஆம்பூர். நமது நாட்டின் தோல், தோல் பொருட்கள் மற்றும் ஷூ உற்பத்தியில் முக்கிய நகரமாக திகழும் ஆம்பூர் பல நூறு கோடி ரூபாய் அந்நிய செலாவணி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தும் நகரமாக திகழ்கிறது. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரத்தில் தற்போது சுமார் 200 கோடி மதிப்பில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆம்பூர் நகரின் மையப்பகுதியில் ஒட்டி பிறந்த இரட்டையர்களாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், சென்னை-பெங்களூரு செல்லும் ரயில்வே இருப்புப்பாதைகளும் உள்ளது. இதில் ஆம்பூர் நகருக்குள் நெடுஞ்சாலை விரிவாக்கமின்றி சுருங்கிய நிலையில் இடநெருக்கடியிலேயே இயங்கி வருகிறது.

இதில் சென்னை- பெங்களூரு செல்லும் ரயில்வே இருப்புப்பாதையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரெட்டிதோப்பு, நியூ பெத்லகேம், கம்பிகொல்லை, நதிசீலாபுரம், எம்.வி.சாமிநகர், மலைமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ெபாதுமக்கள், மாணவ, மாணவிகள் உட்பட சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், ஆம்பூர் நகரத்திற்கும், ஆம்பூர் நகரத்தில் அமைந்துள்ள, காவல்நிலையம், பஸ்நிலையம், நீதிமன்றம், மார்க்கெட், அரசு மருத்துவனை, தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், அஞ்சல் அலுவலகம், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செல்வதற்கும், தினமும் இந்த ரயில்வே இருப்புப்பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். அதேபோல், மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலைகிராமங்களான நாயக்கனேரி, பனங்காட்டேரி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த மலைகிராமங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்களும் இந்த ரயில்வே இருப்புப்பாதையை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த ரயில்வே இருப்புப்பாதையை கடப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ரயில்வே குகை வழி பாதைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிறு குகை வழிப்பாதையை இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளும். பெரிய குகை வழிப்பாதையை லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர பயன்படுத்தப்படுகிறது.

மழைகாலங்களில் அருகில் உள்ள மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீரானது காட்டாற்று வெள்ளம் போல் கழிவுநீருடன் கலந்து இந்த குகை வழிப்பாதைகளை அடைத்து விடுகின்றன. ஆள் உயரத்திற்கு நீர் தேங்கும் நிலையில் பொதுமக்கள் இந்த குகை வழி பாதையை பயன்படுத்த இயலாத நிலை ஏற்படுகிறது. மேலும், மாலை நேரங்களில் மழை பெய்து, ரயில்வே குகைவழிப்பாதைகளில் மழைநீர் தேங்கிகிடந்தால், பெண் தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் வீடு திரும்ப இயலாத நிலை உருவாகிறது. கழிவு நீரும் இங்கு தேங்குவதால் மழைகாலங்களில் இப்பகுதியினர் குகை வழி பாதையை தவித்து ஆபத்தான நிலையில் ரயில்வே தண்டவாளங்களை கடக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். தண்டவாளத்தை கடப்பது குற்றம் என்ற நிலையில் வேறு வழி இல்லாமல் அப்பகுதியினர் சில சமயங்களில் ரயில் நிலையம் அருகே நிற்கும் சரக்கு ரயில்களின் அடியில் புகுந்து கடக்கின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையில் 30 கோடியில் ஆம்பூர் ரெட்டிதோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. இந்த பணிகள் மேற்கொள்ள முதல் கட்டமாக 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவும் செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. அரசின் கொள்கை விளக்க புத்தகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. ஆனால், இதுவரை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்படியே கடந்த பல ஆண்டுகளாக ஆம்பூர் ரெட்டி தோப்பு ரயில்வே பாலம் பணிகள் கிணற்றில் போட்ட கல்லாகக்கிடக்கிறது. ரயில்வே பாலம் அமைக்க வனத்துறை, ரயில்வே அனுமதிக்காக 4 ஆண்டுகளாக காத்திருப்பில் உள்ளது. எனவே ஆம்பூர் மக்களின் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தனிகவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே, வனத்துறை ஒப்புதலுக்காக காத்திருப்பு

ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் கூறியதாவது: கடந்த  ஆண்டு ஜூலை மாதம் நடந்த தமிழக சட்டமன்ற கூட்ட தொடரில் ரெட்டிதோப்பு ரயில்வே  மேம்பாலம் குறித்து கேள்வி எழுப்பினேன். இதற்கு தமிழக முதல்வரும்  துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அந்த இடத்தில்  குடியிருப்பு மற்றும் இதர பகுதிகளில் நிலம் கையகப்படுத்தபட்ட பின்னர்  மேம்பால பணிகள் துவங்கும் என்று தெரிவித்தார். தற்போது முதல் திட்டம்  கைவிடப்பட்டு குடியிருப்பு பகுதிகள் பாதிக்காத வகையில் 2ம் திட்டம்  மற்றும் அதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ரயில்வே ஒப்புதலுக்கான  பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ரயில்வே ஒப்புதலுக்கு பின்னர் தமிழக  வனத்துறை ஒப்புதல் இத்திட்டத்திற்காக பெற வேண்டி உள்ளது. இவ்வாறு கூறினார்.

6 மாதத்திற்குள் பணிகள் தொடங்கப்படும்

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆம்பூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறையுடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டுவிட்டது. பொதுவரைபடம் ரயில்வேதுறையிடமிருந்து வரவேண்டும். திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6 மாதத்திற்குள் பணிகள் தொடங்கப்படும்.

மழைக்காலங்களில் தனித்தீவில் சிக்கியது போல் உள்ளது

ரெட்டி தோப்பு ரயில்வே மேம்பாலம் கோரிக்கை குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே மேம்பாலம் அமைக்க கோக்கை விடுத்து வருகிறோம். ரெட்டிதோப்பு, பெத்லகேம், நாய்க்கனேரி உள்ளிட்ட மலைகிராம மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலை இது. மிக சாதாரணமாக மழை காலங்களில் இந்த சாலைகளில் கழிவுநீர் தேங்கி விடுவதால் குறைந்த பட்சம் 2 மணி நேரத்திற்கும் மக்கள் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் தீவில் சிக்கிய நிலை தான் எங்களுக்கு. இந்த மேம்பாலம் மற்றும் அணுகுசாலை அமையும் பட்சத்தில் இப்பகுதியினர் உயிரை பணையம் வைத்து ரயில் தண்டவாளங்களை கடக்கும் ஆபத்தான நிலை மாறும். எங்களது பகுதிக்கு வந்த பல்வேறு தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு இதுதொடர்பாக மனுக்கள் கொடுத்துள்ளோம், பல்வேறு போராட்டங்களும் நடத்தி உள்ளோம். எனவே, அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »