Press "Enter" to skip to content

தேக்கம்பட்டியிலிருந்து தென்மாவட்ட யானைகள் ‘ரிட்டர்ன்’…கனம் குறைந்தது ‘கஸ்தூரி’ ரவுண்டு கூடியது ‘ராமலெட்சுமி’: மேளதாளத்துடன் கோயில்களில் உற்சாக வரவேற்பு

பழநி: தேக்கம்பட்டி முகாமிற்கு சென்று திரும்பிய தென்மாவட்ட கோயில் யானைகளுக்கு,  மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது. 48 நாட்கள் நடந்த இம்முகாம் நேற்றுடன் முடிவடைந்தது. இம்முகாமில் 13வது முறையாக பங்கேற்ற திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் யானை கஸ்தூரிக்கு, உடல்நிலை பிரத்யேக மருத்துவ குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தவிர ஊட்டச்சத்து உணவு வகைகள், நடைபயிற்சி, யானைகளுக்கான விளையாட்டு போட்டி போன்றவை நடத்தப்பட்டன. இம்முகாமில் கலந்து கொள்ள செல்லும்போது பழநி கோயில் யானை கஸ்தூரி 4,640 கிலோ எடை இருந்தது. தற்போது 100 கிலோ எடை குறைந்து 4,540 கிலோ எடையுடன் திரும்பி உள்ளது. யானை முழு உடல்தகுதியுடன் இருப்பதாக கால்நடை மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். முகாம் முடிந்து திரும்பிய பழநி கோயில் யானை கஸ்தூரிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பழநி கோயில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பழநி கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலெட்சுமி நேற்று, அக்னிதீர்த்த கடற்கரை மண்டகப்படியில் வந்திறங்கியது. யானைக்கு வாழைப்பழம் கொடுத்து கோயில் உதவி கமிஷனர் ஜெயா வரவேற்றார். அங்கிருந்து மேளதாளத்துடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்ட யானைக்கு கிழக்கு நுழைவாயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் யானை கோயிலுக்குள் அழைத்து செல்லப்பட்டது. பக்தர்களுடன் கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்த யானை, வடக்கு நந்தவனத்தில் உள்ள மண்டபத்திற்கு ஒய்வு எடுக்க சென்றது. ராமலெட்சுமி முகாமிற்கு செல்வதற்கு முன்பு 3,680 கிலோ எடையுடன் இருந்தது. தற்போது இதன் எடை 370 கிலோ அதிகரித்து 4,050 எடையுடன் திரும்பியுள்ளது.
இதேபோல் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதி, திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை உள்ளிட்ட தென்மாவட்ட யானைகள் புத்துணர்வுடன் நேற்று கோயில்களுக்கு திரும்பின.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »