Press "Enter" to skip to content

தொட்டியத்தில் இருந்து லாலாப்பேட்டைக்கு தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்டப்படுமா?…விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தொழில் வளர்ச்சியை மேம்படுத்திட தொட்டியத்தில் இருந்து அக்கரையில் உள்ள லாலாபேட்டைக்கு எளிதில் சென்று வர சிறு பாலம் அமைப்பதோடு, கதவனை ஒன்றும் கட்டி மழை வெள்ள காலங்களில் கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை தேக்கினால் விவசாயம் இப்பகுதியில் மேம்படும் என கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அரசுக்கு தடுப்பணை யுடன் கூடிய சிறு பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறும்போது: தொட்டியத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதால் வரதராஜபுரம், அரசலூர், திருநாராயணபுரம், காரைக்காடு , நத்தம் ,காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும். இதனால் விவசாயிகளின் வாழ்வு மேம்படும்.காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தொடர்ந்து சாகுபடி செய்ய மிகுந்த உதவியாக இருக்கும். தொட்டியம் பகுதியில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் வாழை ,வெற்றிலை ஆகிய தொழில் பிரதானமாக செய்து வருகின்றனர்.

இந்த விவசாய சாகுபடிக்கு இப்பகுதியைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதால் எண்ணற்ற ஏழை குடும்பங்கள் வாழ்வதற்கு உதவியாக உள்ளது. அதேவேளை காவிரி ஆறு வறண்டு போகும் காலங்களில் விவசாய பணிகள் பெரிதாக மேற்கொள்ளப்படுவதில்லை. அதுபோன்ற நேரங்களில் ஏழை தொழிலாளர்களின் குடும்பத்தின் பாடு பெரும் திண்டாட்டமாக மாறிவிடுகிறது. ஏனென்றால் தொட்டியம் பகுதியில் விவசாய கூலி வேலை கிடைக்காமல் பல்வேறு இடங்களுக்கு வாழ்வாதாரத்தை காத்திட வேலை தேடி அலையும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக தொட்டியத்திற்கு நேர் எதிரே அக்கறையில் உள்ள லாலாபேட்டை க்கு தொட்டியம் பகுதியிலிருந்து தினசரி சுமார் 500 கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு சென்று திரும்புகின்றனர். இவ்வாறு வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் தொட்டியத்தில் இருந்து முசிறிக்கு சென்று அங்கிருந்து மாற்று பேருந்தில் லாலாபேட்டை செல்லுகின்றனர்.

அக்கரையில் உள்ள லாலாபேட்டை செல்லவேண்டுமானால் ஒன்று குளித்தலை வழியாக செல்ல வேண்டும் அல்லது மாயனூர் கதவணை வழியாக செல்ல வேண்டும். வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு இந்த இரண்டு வழிகளும் காதைச் சுற்றி மூக்கை தொடும் விஷயமாகும். அதற்கு முத்தாய்ப்பான மாற்று ஏற்பாடாக தமிழக அரசு தொட்டியத்தில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்கே சிறு பலத்துடன் கூடிய கதவணை கட்டுவதால் போக்குவரத்து எளிதாகும். அதேவேளை மழை வெள்ள காலங்களில் கடலில் கலந்து வீணாகும் தண்ணீர் தேக்கி வைப்பதால் நிலத்தடிநீர் மட்டம் உயர்வதோடு பாசனத்திற்கு தேவையான அளவு தண்ணீரும் கிடைக்கும். எனவே தமிழக அரசு பொறியியல் வல்லுநர் குழுவை அமைத்து தொட்டியத்தில் இருந்து லாலாபேட்டை சிறு பலத்துடன் கூடிய கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் சுப்பிரமணியன் கூறுகையில்: தொட்டியம், பாலசமுத்திரம், கார்த்திகை பட்டி , கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கூலி தொழிலாளர்கள் லாலாபேட்டை விவசாய வேலைகள் செய்வதற்காக முசிறி வழியாக செல்லுகின்றனர். குறிப்பாக காவிரி ஆற்றின் அக்கரையில் உள்ள லாலாபேட்டை பகுதி காவிரி படுகை தாழ்வாக அமைந்துள்ளதால் இயல்பாகவே காவிரி ஆற்றில் தண்ணீர் அப்பகுதியில் அதிகம் செல்லுகிறது. தொட்டியம் பகுதியில் காவிரி ஆறு சற்று மேடாக இருப்பதால் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. மேலும் மாயனூர் கதவணை யில் கரூர் மாவட்டம் அக்கரை பகுதியில் உள்ள சட்டர்களே அதிகம் திறக்கப்படுவதால் காவிரி தண்ணீர் அப்பகுதியிலேயே நிரம்ப செல்கிறது. தொட்டியம் பகுதியில் உள்ள காவிரி ஆற்று கரையில் இருந்து நின்று பார்க்கும்போது இக்கரையில் தண்ணீர் ஓடாது .ஆனால் அக்கறையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். இதனால் லாலாபேட்டை பகுதியில் உள்ள விவசாய பெருமக்கள் விவசாய பணிகளை அப்பகுதியில் சிறப்பாக செய்ய முடிகிறது. காவிரி ஆற்றில் மழை வெள்ள காலங்களில் மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கும் காலங்களில் மட்டுமே தொட்டியம் பகுதியில் உள்ள டெல்டா விவசாயிகள் முழுமையாக பயன்பெற முடிகிறது. விவசாய பணிகள் பெருமளவு நடைபெறும் சமயங்களில் மட்டுமே கூலி தொழிலாளர்கள் வேலை தேடி அக்கறைக்கு செல்லும் நிலை ஏற்படுவதில்லை.

குறிப்பாக தொட்டியத்தில் இருந்து தடுப்பணையுடன் கூடிய சிறு பாலம் அமைப்பதால் இப்பகுதியில் விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் எளிதாக அக்கறையில் உள்ள லாலாபேட்டை சென்று வணிகத்தில் ஈடுபடவும் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.
குறிப்பாக இங்கு விவசாய விளைச்சல் குறைவாக இருக்கும் காலங்களில் லாலாபேட்டை பகுதியில் விளைவிக்கப்படும் வாழை இலைகள், வாழைப்பழங்கள், வெற்றிலை உள்ளிட்ட இதர வியாபார பொருட்களை தொட்டியம் பகுதிக்கு லோடு ஆட்டோக்களில் எடுத்துவந்து வியாபாரம் செய்ய முடியும். தொட்டியம் பகுதியில் உள்ள விவசாயிகள் லாலாபேட்டை பகுதியில் குத்தகைக்கு விவசாய நிலங்களை பெற்று விவசாய தொழில் செய்யலாம். அப்பகுதியில் கிடைக்கும் விவசாய கூலி வேலைகளுக்கு அலைச்சல் இல்லாமல் எளிதாக சென்று வீடு திரும்ப முடியும். சிறு பாலத்தில் லோடு ஆட்டோக்கள் கார் வேன் இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைப்பது அவசியமாகும். விற்பனைப் பொருள் அதிகளவு கிடைத்தால் பொதுமக்களுக்கு விலை குறைச்சலாக கிடைக்க வாய்ப்பு உண்டு. மேலும் பாலத்தோடு தடுப்பணை கட்டினால் தேவையான தண்ணீர் இப்பகுதி விவசாயிகளுக்கு கிடைப்பதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இதனால் சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. விவசாயக் குடும்பத்தில் பிறந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொட்டியம் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொட்டியத்தில் இருந்து லாலாபேட்டைக்கு சிறு தடுப்பணை யுடன் கூடிய கதவணையை கட்டித் தரவேண்டும் என்றார். முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜிடம் கேட்ட போது: விவசாயிகள், பொதுமக்கள் , கல்வியாளர்கள், ஆகியோர்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினருக்கு தமிழக அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறேன். தொட்டியத்தில் இருந்து லாலாபேட்டைக்கு தடுப்பணை யுடன் கூடிய சிறு பாலம் அமைப்பது குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுகுறித்து ஆற்று பாசன கோட்ட அலுவலர்கள் பொறியியல் வல்லுனர்கள் ஆகியோரிடம் கலந்து பேசி ஒரு திட்ட வடிவத்துடன் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன் .முசிறி அருகே சிறுதடுப்பணை கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யும் பணியும் ,திட்ட மதிப்பீடும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தொட்டியம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றித்தர தமிழக முதல்வரை கண்டிப்பாக நேரில் சந்திப்பேன் என்றார். பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது: தொட்டியத்தில் இருந்து லாலாபேட்டைக்கு போக்குவரத்து வசதியுடன் கூடிய தடுப்பணை என்பது விவசாயிகளின் நீண்ட நாளைய கோரிக்கை ஆகும் விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இதற்காக அரசு பொறியியல் வல்லுநர்களை கலந்து ஆலோசித்து திட்டத்திற்காக செலவிடப்படும் நிதி அதனால் பயன்பெறும் மக்கள் தொகை ஆகியவை கருத்தில் கொள்ளப்படும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இத்திட்டம் உதவினால் அரசு கண்டிப்பாக செயல்படுத்தும் என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »